2024 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டையும் ஒரே வருடத்தினுள் நடாத்தி பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவோம்
– கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
அடுத்த வருடம் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் ஒரே வருடத்திற்குள் நடாத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகளை படிப்படியாக யதார்த்த நிலைக்கு இட்டுச் சென்று பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவதாகவும் 7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜுன் 15 ஆம் திகதி நியமனங்களை பெற்றுக் கொடுத்து தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். அத்துடன் ஆசிரிய பற்றாக்குறை கூடுதலாக நிலவும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் மொழி ஆகிய பாடத் துறைகளுக்கு அனுமதியைப் பெற்று பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் 35 வயதிற்கும் குறைவான பட்டதாரிகளில் இருந்து தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் ஆசிரியர்களை இணைத்க் கொள்வதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
கல்வி அமைச்சரின் தலைமையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் கல்வி அமைச்சில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மிகச் சிறந்த சித்திகளைப் பெற்ற ஆனாலும் குறைந்த வருமானம் பெறும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியரின் உயர்தர கல்வி நடவடிக்கைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வினைத் தொடர்ந்து அமைச்சர் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார்.
மேற்படி புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தினை இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து 2006 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தி வருகின்றன. அகிம்சையின் தந்தையாக இந்தியாவில் போற்றப்படும் மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தையொட்டி இப்புலமைப்பரிசிலுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.