இலங்கை அதிபர் சேவையில் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை முறையாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் அறிவிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணாயக்கார உட்பட கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் நிபுணத்துவம் கொண்ட ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கிய மேற்படி குழுவானது ஏற்கனவே தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
சகல அதிபர்கள் சங்கங்களிடமிருந்தும் அவர்களது முன்மொழிவுகளைப் பெற்றுள்ளதோடு மேலதிக முக்கியமான விடயங்களை முன்வைப்பதற்காக மே மாதம் 9ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மே 15 முதல் தொழிற்சங்க அமைப்புகளுடன் நேர்காணல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, கல்வித்துறைசார்ந்த வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களிடமும் விடயங்களைக் கேட்டறிவதற்கும் மாகாண வலய அலுவலகங்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட சில பாடசாலைகளுக்குச் சென்று அதிபரது பணிகள் பற்றிய தற்போதைய நிலவரத்தை அறிந்துகொள்ள உள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார். உத்தேச கல்விச் சீர்திருத்தங்களையும் பயன்படுத்தி அதிபர் சேவையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்மொழியுமாறு அமைச்சர் இங்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்தக் குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது.