வகுப்பறையினுள் முறையான கல்வியைக் கொண்டதாக மிகச் சிறந்த கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் பயன்களை கூடுதல் எண்ணிக்கையிலான பாடசாலை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அமெரிக்க அரசு அனுசரணை வழங்கியுள்ள அதேவேளை, மேற்படி பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் (Julie Chung) அவர்கள் எம்பிலிபிட்டிய, கல்வங்குவ, குருஆரகம வித்தியாலயத்திற்கான கண்காணிப்பு விஜயத்தில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களுடன் இணைந்து கொண்டார். இதன்போது வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக நூல்களும் கையளிக்கப்பட்டதுடன், பிள்ளைகளின் துப்பரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கருத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
பிள்ளைகளின் பாடசாலை வரவினை அதிகரித்தல், சிறந்த சுகாதார பழக்க வழக்கங்களை ஏற்படுத்துதல் மற்றும் சத்தான உணவுப் பழக்கத்திற்கு பிள்ளைகளை ஊக்குவித்தல் என்பவற்றினூடாக பாடசாலைப் பிள்ளைகளின் உடல் மற்றும் உளச் சுகாதார மட்டத்தினை சிறந்த முறையில் பேணிச் செல்வதே இந்த போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களுள் ஒன்றாகும். அந்த வகையில் அமெரிக்க அரசாங்கத்தினூடாக பல்வேறு சந்தர்ப்பங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி, வட்டானா பருப்பு, ரோச செமன் மற்றும் உணவு சமைப்பதற்கு பயன்படுத்தும் எண்ணெய் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி விஜயத்தின் போது சபரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ அவர்கள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிதிகள் பலரும் அத்துடன் சேவ் தி சில்ரன் (Save the Children) அமைப்பின் உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டிருந்தனர்.