புதுடெல்லியிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பெலாரஸ் நாட்டின் தூதுவர் ANDREI I. RZHEUSSKY க்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இந்த நாட்டின் உயர்கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக பெலாரஸ் நாட்டில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இலங்கை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான இருதரப்பு வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. பெலாரஸ் அரசு இந்த நாட்டிற்கு பெற்றுத் தந்துள்ள உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் வழங்கியுள்ள ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் பெலாரஸ் தூதுவருக்கு கல்வி அமைச்சர் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அதன் பின்னர் பெலாரஸ் தூதுவர் தொழில் பயிற்சி அதிகாரசபை, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை, திறன்கள் அபிவிருத்தி நிதியம், உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனம், NSBM பசுமைப் பல்கலைக்கழகம், மொரட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பிரதானிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த நிறுவனங்களை பெலாரஸ் உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்புபடுத்தி வெளிநாட்டுத் தகைமைகள் மற்றும் அங்கீகாரம் கொண்ட பாடநெறிகளை இந்நாட்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாப்பட்டது. மேலும் திறன்கள் அபிவிருத்தி, தொழில்நுட்பக் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பயிற்சித் திட்டங்கள் மற்றும் பரிமாற்றத் திட்டங்களுக்கு அவசியமான முழுமையான ஆதரவை வழங்குவதாக பெலாரஸ் தூதுவர் இதன்போது உறுதியளித்தார்.