– கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த
மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதைத் தடுப்பதற்கும், பாடசாலைகளுக்கு கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். கொழும்பு டி. எஸ். சேனநாயக்க வித்தியாலயமானது எதிர்கால தொழில்நுட்ப உலகில் நிலைபேறான அபிவிருத்திக்கு அவசியமான வசதிகளைக் கொண்ட பாடசாலையாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர். “குறிப்பாக நகர்ப்புறச் சூழலில், பிரதான பாடசாலைகளில் குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் காலையில் பாடசாலைக்கு வருகை தரும் பிள்ளைகளின் புத்தகப் பைகளை பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவத் தலைவர்கள் பரிசோதனை செய்ததைப் போன்று மீண்டும் அப்பணியைச் செய்வார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். தற்போது இவ்வாறு பரிசோதனை செய்யும் நடவடிக்கை இடம்பெறுவதில்லை. எனவே இனிப்புப் பண்டங்களாகவோ அல்லது வேறு வகையான பண்டங்களாகவோ போதைப்பொருட்களை பிள்ளைகளிடம் கொடுக்கலாம். இது பற்றி வெவ்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றது. எனவே சுற்றுநிரூபம் ஒன்றினை வெளியிட்டு அடுத்த வாரம் முதல் சகல மாகாணப் பணிப்பாளர்களூடாக இப்பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் சூட்சுமமான முறையில் இந்த போதைப்பொருள் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பெரும்பாலானவர்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. இரண்டு கிராமை விட அதிகமாக ஹெரோயின் வைத்திருந்து பிடிபட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்படுமென அபாயகரமான ஔடதங்கள் சட்டத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக வந்துள்ள போதைவஸ்து ஐஸ் ஆகும். ஐஸ் தொடர்பில் திருத்தங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அதற்கான மாற்றீடு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. காலாவதியான அந்த சட்டங்களைத் திருத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பயன்பாட்டிலுள்ள புதிய வகை போதைப்பொருட்கள் தொடர்பில் தண்டனைகள் வழங்கப்படுவதற்கு கண்டிப்பாக இந்த சட்டங்கள் திருத்தப்படுதல் வேண்டும். அந்த விடயங்கள் தற்பொழுது வேகமாக இடம்பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் பெருமளவிலான ஹெரோயின் போதைப் பொருளை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றிய தகவல்களை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். இருந்த போதிலும் மிக சூட்சுமமான முறைகளில் இவற்றை பாடசாலை பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்கின்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் நாம் உடனடியாக செயற்பாட்டு மட்டத்திற்கு வரவேண்டும். தற்போதைய நிலையில் பல வேலைத்திட்டங்கள் நடைமுறையில் காணப்படுகின்றன. என்ற போதிலும் அதற்கும் மேலதிகமாக கூடுதலான கரிசனையை நாம் செலுத்த வேண்டியுள்ளது. இது வட கொழும்பு மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களுக்கு சென்றால் நிலைமை இதையும் விட ஆபத்தானதாக இருக்கலாம்.
எனவே, நாம் பாடசாலை மாணவர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதனை மிக உன்னிப்பாக அவதானித்து, அடுத்த வாரத்திற்குள் ‘சூம்’ தொழில்நுட்பத்தினூடாக கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்து தற்போது நடைமுறையில் உள்ள படிமுறைகளான, சுற்றறிக்கை வெளியிடல், உணவு மற்றும் மருந்து பற்றிய விழிப்புணர்வூட்டல், ஆலோசனை ஆசிரியர்களை நியமித்தல் போன்ற பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற் சென்று யுத்த காலப்பகுதியில் குண்டுகளுக்கு பயந்து நாம் எந்தளவு கரிசனையுடன் இருந்தோமோ அந்த வகையில் பெற்றோர்களதும் மற்றும் பாடசாலை சமூகத்தினதும் கூடுதலான கவனத்தினை இது தொடர்பில் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக, எதிர்காலத்தில் மேலும் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறேன்” எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் கித்சிறி லியனகம, டி. எஸ். சேனநாயக்கா கல்லூரியின் அதிபர் பிரசன்ன உடுமுஹந்திரம் ஆகியோர் உட்பட மேலும் பல அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.