உயர்கல்விக்காக இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அளவுரீதியாக அதிகரிக்கும் நோக்கில் உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களூடாக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை இந்நாட்டிலேயே மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து கல்வி அமைச்சு 2022.08.31 ஆம் திகதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கமைவாக இந்த வருடத்திற்கான மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு பாடநெறிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 6,847 மாணவர்களுக்கான கற்றல் காலப்பகுதி மற்றும் சலுகைக் காலப்பகுதி ஆகிய 4 அல்லது 5 வருடங்களுக்குரியதான முழுமையான வட்டித் தொகையை திறைசேரியினூடாக செலுத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த இக்காலப்பகுதிக்கு பிறகு வரும் 7 அல்லது 8 வருட காலப்பகுதியில் மிதக்கும் வட்டி விகிதங்களின் கீழ் முழுமையான வட்டித் தொகையையும் கடன் தொகையையும் மாணவர்கள் செலுத்தக்கூடிய வகையில் இந்த கடன் வசதிகள் வழங்கப்படுகிறது.
அதேவேளை, பாடநெறிக் கட்டணமாகிய எட்டு இலட்சம் ரூபா பணத்தொகையை தாமாகவே அரையாண்டு அடிப்படையில் செலுத்தி இக்கடன் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விருப்பத்தினை தெரிவித்துள்ள மாணவர்களுக்கு மேற்படி சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உயர்தரத்தில் சித்தியடையும் சுமார் இரண்டு இலட்சம் மாணவர்களுள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்ற நாற்பதாயிரம் மாணவர்களைத் தவிர, எஞ்சிய மாணவர்களுக்கு அவர்கள் பெற்றுக்கொள்ளும் உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுத் திறமையின் அடிப்படையில் அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை இந்நாட்டில் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது மற்றும் அதற்கென பெற்றோரால் மேற்கொள்ளப்படுகின்ற அதிக செலவினைக் குறைப்பதற்காகவே மேற்படி வசதிகள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாணவர் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றது