தேசிய தாதியர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (20) முற்பகல் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேசிய தாதியர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
தாதியர் கல்வியில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டமொன்றை வழங்குவது காலத்துக்கு பொருந்தும் செயற்பாடு என பிரதமர் இதற்கு முன்னரும் பரிந்துரைத்திருந்ததையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தற்போது நாடளாவிய ரீதியில் 17 தாதியர் கல்லூரிகளூடாக தாதியர்கள் சுகாதார சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படுவதுடன், சேவைகளின் தேவைப்பாடு மற்றும் செயற்படுத்தப்படும் தாதியர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தின்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதன்படி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தாதியர் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தரமான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தாதியர் பட்டத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அரச அதிகாரிகள் இதன்போது பிரதமருக்கு விளக்கமளித்தனர்.
தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றைத் தாபிக்க வேண்டியதன் அவசியத்தை அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் நாராஹேன்பிட்டிய அபயராம விகாரையதிபதி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அவர்கள் சுட்டிக்காட்டிய அதேவேளை தமது சங்கம் 1991 ஆம் ஆண்டு முதல் இந்த விடயம் தொடர்பில் பல வேண்டுகோள்களை முன்வைத்திருந்த விடயத்தினையும் சுட்டிக்காட்டினார்.
கல்வி அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பிரதமரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புச் செயலாளர் பிரியந்த ரத்நாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உற்பத்தித்திறன் நிறுவனத்தின் ஆலோசகர் பேராசிரியர் எம்.திலகசிறி, அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் உப தலைவர் ஆர்.கே. படுவிட்ட ஆகிய அதிகாரிகளுடன் கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Friday, 22 April 2022
/
Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்