ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதை நிறுத்த தலையிடுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்விற்கு 2022.01.23 ஆம் திகதி கங்கொடவில சாராநாத் பௌத்த நிலையத்திற்கு விஜயம் செய்த போது, ஸ்ரீ தீராநந்த அறநெறிப் பாடசாலையின் பிரதி அதிபர் சிசிர குமார அறநெறிப் பாடசாலை பாடசாலை ஆசிரியர்கள் சார்பாக இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே ஆகியோரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் வருகையை மேற்கோள் காட்டி அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்த விடயமாவது, ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதை நிறுத்தி அறநெறிக் கல்விக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பில் இதற்கு முன்னரும் கலந்துரையாடப்பட்ட போதிலும் உறுதியான இறுதித் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென்பதாகும். எனவே இவ்விடயத்தினை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து கல்வி அமைச்சும் புத்தசாசன அமைச்சும் இணைந்து இவ்வேண்டுகோளினை நிறைவேற்றுவதற்கு மத்தியஸ்தம் செய்யுமாறு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் விசேடமாக வேண்டிக் கொண்டனர்.
கங்கொடவில சாராநாத் பௌத்த நிலையத்தின் தலைமைத் தேரர் வண. தலாவே சத்ததிலக தேரோ உட்பட மகா சங்கத்தினரின் ஆசியுடன் பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேசவாசிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.