அரசாங்க பாடசாலைகளுள் இதுவரையில் ஆரம்பிக்கப்படாதுள்ள சகல
வகுப்புக்களையும் அடுத்த வாரம் தொடக்கம் ஆரம்பிக்க முடியுமென கல்வி அமைச்சர்
தினேஷ் குணவர்தன அவர்கள் 2021.11.15 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 6-7-8-9
தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை சுகாதார பரிந்துரைகளுக்கமைவாக 2021
நவம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சின்
செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் உட்பட அமைச்சின் அதிகாரிகளுடன்
பத்தரமுல்ல, இசுருபாய, கல்வி அமைச்சில் 2021.11.16 ஆம் திகதி இடம்பெற்ற
கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.
கொவிட் 19 நிலைமையின் காரணமாக கல்வி நடவடிக்கைகளை நிறுத்திய
பாடசாலைகளில் சுகாதார பரிந்துரைகளுக்கமைவாக நான்கு கட்டங்களின் கீழ் மீண்டும்
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற் கட்டமாக 200
இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு
வகுப்புகளையும், இரண்டாம் கட்டத்தில் சகல பாடசாலைகளினதும் ஆரம்பப்
பிரிவுகளையும், மூன்றாம் கட்டத்தில் சகல பாடசாலைகளிலும் சாதாரண தரம் மற்றும்
உயர் தர வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன. நான்காம் கட்டமாக சகல
பாடசாலைகளிலும் 6-7-8-9 ஆம் தரங்களும் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம்
ஆரம்பிக்கப்படும்.
அதனடிப்படையில் நாட்டில் சகல அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற தனியார்
பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் 2021 நவம்பர் 22 திங்கட்கிழமை தொடக்கம்
ஆரம்பிக்கப்படும்.
Friday, 19 November 2021
/
Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்