நாட்டில் நிலவும் தொற்றுநோய் நிலைமை காரணமாக பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை தொலைக்காட்சி ஊடகம் வாயிலாக பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட தேசிய கல்வி ஒளிபரப்பு நிலையமானது (National Streaming Hub) கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் அழைப்பின் பேரில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களினால் 2021-09-07 ஆம் திகதி பத்தரமுல்ல, இசுருபாய கல்வி அமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட மற்றும் அதிவேக இணையதள இணைப்புகளைக் கொண்டமைந்த இந்த நிலையத்தினூடாக தேசிய கல்வி நிறுவகம் தயாரிக்கும் சகல பாடவிதான நிகழ்ச்சிகளையும் உரிய காலப்பகுதிகளில் பாடத்திட்டங்களாக கவரும் வகையில் தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் இணைய அலைவரிசைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேற்படி நிகழ்ச்சிகளின் பண்புத்தரம் மற்றும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு என்பன பாடவிதான பணிப்பாளர்களின் தொடர் கண்காணிப்பாக இந்த நிலையத்தில் இடம்பெறுவதோடு, ஏற்படக்கூடிய தொழில்நுட்ப சிக்கல்களையும் தீர்க்கக் கூடிய வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்ட இந்த நிலையமானது தொற்றுநோய் நிறைவடைந்த பிறகும் தொடர்ச்சியாக செயற்படும் ஒரு கருத்திட்டமாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக இணையதள வசதிகள் இல்லாத பிள்ளைகளும் தொலைக்காட்சி மூலமாக தமது கல்வி நடவடிக்கைகளை வீட்டிலிருந்தவாறே கற்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. எதிர்வரும் காலப்பகுதியில் சகல மாவட்டங்களையும் கவரும் வகையில் கலைக்கூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதோடு, தற்போது பயன்பாட்டிலுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகள் இரண்டிற்கு மேலதிகமாக இன்று மேலும் இரண்டு அலைவரிசைகள் சேர்க்கப்படுகின்ற அதேவேளை ஜனவரி மாதமளவில் அலைவரிசைகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்படும்.
இதன்போது கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள்…
“நாட்டின் மிக முக்கியமான ஓர் அத்தியாயத்திற்காக எமது கல்வி அறிவினை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க முன்வரும் ஒரு சந்தர்ப்பத்தில் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட நெணச கருத்திட்டம் தொடக்கம் எந்தவொரு சிக்கல் நிலைமையிலும் தொடர்ந்து பயணிக்கும் வகையில் உறுதியாக பயன்படுத்தக் கூடிய சகல காரணிகளையும் உள்ளடக்கியதாக ஆக்கத்திறன் மிக்க வகையில் ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்திற்கான நோக்கு வேலைத்திட்டம் ஆசிர்வாதத்தினையும் சக்தியையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இது கல்வித்துறைக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த அரச துறைக்குமான தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி பயணிக்கக் கூடியதொரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. சபீட்சத்திற்கான நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் படி, தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கல்வியை பிள்ளைகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஓர் வெற்றிமிகு ஆரம்பமாக இதனைக் கருத முடியும். நாட்டில் நிலவும் தற்போதைய அனர்த்தத்திற்கு மத்தியில் இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டமையானது தற்போதைய பிள்ளைகளின் கல்வித் தேவைப்பாட்டினை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பானதாக அமையும். தேசிய கல்வி நிறுவகம் மற்றும் நெணச கருத்திட்டங்களை ஒன்றிணைத்து கல்வி அமைச்சினூடாக மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாட்டிற்கு நாட்டில் பிரபல்யமான ஆசிரியர் குழாத்தினால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் பல அலைவரிசைகளூடாக ஒளிபரப்பு செய்யப்படுவதானது தற்போதைய சூழ்நிலையில் பிள்ளைகளின் கல்வியின் பொருட்டு கல்வி அமைச்சு மேற்கொண்ட மற்றுமொரு வெற்றிகரமான செயற்பாடு” எனவும் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள்…
“தேசிய கல்வி நிறுவகத்தின் மூலமாக இதுவரையில் பல்வேறு அலைவரிசைகளூடாக கொண்டு நடாத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் நெணச கருத்திட்டம் என்பவற்றுடன் இணைந்து கல்வி அமைச்சின் முழுமையான மேற்பார்வையின் கீழ் முறையான வேலைத்திட்டமாக இதனை நடைமுறைப்படுத்துவது இதன் பிரதான குறிக்கோளாகும். இதன்போது அடிப்படையில் நான்கு பிரதான அலைவரிசைகளூடாக தரம் 1 தொடக்கம் தரம் 13 வரையிலான பிள்ளைகளுக்கு முற்பகல் 7 மணி முதல் இரவு 11 மணி வரையில் பாட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். திறமையான ஆசிரிய குழாத்தினால் 1,000இற்கும் மேற்பட்ட பாடங்கள் ஒக்டோபர் 1ஆம் திகதி தொடக்கம் 7 அலைவரிசைகளூடாகவும், பின்னர் அது 10 அலைவரிசைகள் வரையில் விரிவாக்கப்பட்டு பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடங்கள் இணைய தளத்தினூடாக பிள்ளைகளுக்கு இலவசமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனூடாக இந்த இடர் நிலைமையில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாடங்களை மீள முறையான வகையில் கற்பதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டம் உறுதுணையாக அமையும் என்பது எமது நம்பிக்கையாகும்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், விளையாட்டு, இளைஞர் அலுவல்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, விஜித பேருகொட, சீதா அரம்பேபொல ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமிணீ குணவர்தன, அநுப பெஸ்குவல் ஆகியோரும் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி கபில பெரேரா, கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் உபாலி எம்.சேதர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.