பல்கலைக்கழக் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்காக தொழிற்பயிற்சியை உள்ளடக்கிய கல்வி நிலையங்களை அதிகமாக ஆரம்பிக்க வேண்டுமென புதிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார். உயர் கல்விப் பிரிவின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் நேற்று (19) மாலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பல்கலைக்கழக கல்வியை இந்நாட்டின் தொழிற் துறைக்கான கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய வகையிலானதாக மாற்றியமைப்பது காலத்தின் தேவைப்பாடென இதன்போது அமைச்சர் சுட்டிக் காட்டினார். கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் சரியான வகையில் செயற்படுவதில்லை என ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள காரணத்தினால் அது தொடர்பில் ஆராய்ந்து அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
இங்கு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்கள், தற்போது இலங்கையின் பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் உரியவாறு மேற்கொள்ளப்படுகின்றது என்ற விடயத்தினை சுட்டிக் காட்டினார். தற்போதைய நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்குகின்ற 16 பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக தாதியர்களுக்கான பல்கலைக்கழகம் மற்றும் விளையாட்டுத் துறைக்கான பல்கலைக்கழகம் என்பவற்றினையும் ஆரம்பிப்பதாகவும் அதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பிரச்சினைகள் நிலவுவதாகவும் சாதாரண பட்டத்தினை பெறுவதற்கான 3 வருட காலத்திற்கு பதிலாக 8 வருடங்கள் செல்கின்றதெனவும் விசேட பட்டத்தினைப் பெறுவதற்கு 10 வருட காலங்கள் செல்கின்றது என்ற விடயத்தையும் தலைவர் இதன்போது தெளிவுபடுத்தினார். இந்த நிலைமையினை மாற்றி கிழக்குப் பல்கலைக்கழகத்தினை யதார்த்த நிலையில் இயங்க வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் யதாமிணீ குணவர்தன அவர்கள் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் ஆகியோரும் இணைந்துகொண்டிருந்தனர்.