கல்வித் துறையில் சவால்கள் பல எழுந்துள்ள சந்தர்ப்பத்தில் பொரளுகொட சிம்ம பரம்ரையைச் சேர்ந்த ஒருவரிடம் கல்வி அமைச்சின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதொரு சந்தர்ப்பம் இதுவே என கல்வி அமைச்சின் பிரிவெனாக் கல்வி ஆலோசகர் தொடம்பஹல ராஹுல தேரர் தெரிவித்தார். புதிய கல்வி அமைச்சராக பதவியேற்ற தினேஷ் குணவர்தன அவர்கள் இன்று (19) முற்பகல் கல்வி அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டமை தொடர்பாக ஆசி வழங்கும் நிகழ்வின் போதே ராஹுல தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்விற்கு நாராஹேன்பிட்ட அபயாராம விகாரையின் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் பிரிவெனாக் கல்விப் பணிப்பாளர் சங்கைக்குரிய வட்டினாபஹ சோமானந்த தேரர் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
முன்னாள் கல்வி அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் கல்வி அமைச்சுடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சுக்களுக்கு பொறுப்பான விஜித்த பேருகொட, பியல் நிஷாந்த ஆகியோரும் புதிய அமைச்சராக பதவியேற்ற தினேஷ் குணவர்தன அவர்களை வாழ்த்துவதற்காக இந்நிகழ்வில் இணைந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போதனையுரை வழங்கிய தொடம்பஹல ராஹுல தேரர் தொடர்ந்து தமது உரையின் போது, மூன்று முன்னாள் கல்வி அமைச்சர்களின் முன்னிலையில் புதிய கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன அவர்கள் கடமைகளை ஆரம்பிப்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும், எனத் தெரிவித்தார். “கல்வித் துறையில் பல சாவல்கள் நிலவுகின்றன. மேற்படி சவால்களை வெற்றி கொள்ள முடியும். நாட்டை நேசித்த, நாட்டின் மீது பற்று கொண்ட ரொபர்ட் குணவர்தன, பிலிப் குணவர்தன ஆகியோரைப் போன்று பொரளுகொட சிம்ம பரம்பரையைச் சேர்ந்தவரான தினேஷ் குணவர்தனவிற்கும் இந்த சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய இயலுமை இருப்பதாக தாம் நம்புவதாகவும் ராஹுல தேரர் தெரிவித்தார். மத அனுஷ்டானங்களின் பின்னர் அமைச்சின் உயர் அதிகாரிகளைச் சந்தித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள், இந்த நாட்டின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரது எதிர்பார்ப்பாக இருப்பது பிள்ளைகள் அறிவில் திறமை கொண்டவர்களாக மாற்றம் அடைவதே என்ற காரணத்தினால் தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவது கல்வி அமைச்சின் பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.
“அறிவே சகல துறைகளிலும் மிகவுயர்ந்த செல்வமாகும். சமூகத்தில் வேறெந்த செல்வம் இருந்தாலும் அழிந்து விடலாம். இருப்பினும் அறிவு எனும் செல்வமானது அழியாது நாளுக்கு நாள் புதிதாகிறது. எனவேதான் கல்வி அமைச்சிற்கு பாரிய கௌரவம் கிடைக்கின்றது. டொனமூர் ஆளுநர் காலப்பகுதியில் கல்விக்கு பெறும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அவ்வனைத்து தடைகளையும் வெற்றி கொண்டு சீ.டப்.டப். கன்னங்கர அவர்கள் அன்று இலவசக் கல்வி சட்டத்தினை ஒரு பெரும்பான்மை வாக்குடன் நிறைவேற்றிக் கொண்டார். அன்று நிறைவேற்றிக் கொண்ட அந்த சட்டத்தின் காரணமாகவே தற்போது புதிய புதிய வழிகளூடாக அறிவினை பகிர்ந்தளிகும் முறைகள் தோற்றம் பெற்றுள்ளன” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
“எமது பிள்ளைகளில் பெரும்பாலானோர் பாடசாலைகளில் இருந்து இடைவிலகிச் செல்கின்றனர். அவர்களை சமூகத்தில் வலுவான பிரஜைகளாக மாற்றுவதற்கு கல்விக்கு பின்னரான கற்றல் நிலையங்களை கூடுதலாக ஆரம்பித்தல் வேண்டும். அறிவை மேம்படுத்தும் செல்வம் எனக் கூறியே ஜப்பான் எம்மிடம் தொலைக்காட்சியை வழங்கியது. ஆனால் இதுவரையில் தொலைக்காட்சி, வானொலி போன்ற இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்களை அறிவினை வளர்ப்பதற்கு பயன்படுத்தியுள்ளோமா என ஆராய வேண்டும்”, எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துக் கொண்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள், கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் கல்வித் துறையில் சவால்களை வெற்றி கொள்வதற்கு பயன்மிக்க பல செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள விடயத்தினை சுட்டிக்காட்டினார். விசேடமாக க.பொ.த. (உ/த) பரீட்சையை நடாத்துவதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக ஜீ.எல் பீரிஸ் அவர்கள் இதன்போது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.