- சா/தர அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 08 வரையில் நடைபெறும்
- முதலாம் தரத்திற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி ஆகஸ்ட் 07 வரையில் பிற்போடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
நெலும் மாவத்தையில் 2021/07/19 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இணைந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை 2021 ஒக்டோபர் மாதத்தில் நடாத்தப்படவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை நாட்டில் நிலவும் சுகாதார நிலைமையினைக் கவனத்திற் கொண்டு மாணவ மாணவியருக்கு அநீதி ஏற்படாத வகையில் சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 622,000 மாவர்களின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது இதுவரையில் காலதாமதம் அடைவதற்கான காரணம் அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளை உரிய காலப்பகுதிக்குள் நடாத்த முடியாமையே ஆகும். அதன்படி அழகியல் பாடங்களுக்கு தோற்றவுள்ள 169,000 மாணவர்களது செயன்முறைப் பரீட்சைகளை இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி சனிக்கிழமை முதல் செப்டெம்பர் மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை வரையில் நடாத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து மிக விரைவாக மேற்படி பெறுபேறுகளை வெளியிடுவதற்கும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. அம்மாணவர்களுக்கான முன் பயிற்சி நடவடிக்கைகளை பாடசாலைகளில் ஆரம்பிப்பதற்கு திட்மிடப்பட்டுள்ள அதேவேளை அம்மாணவ மாணவியரை முழுமையான சுகாதார பரிந்துரைகளுக்கமைவாக ஜூலை மாதம் 26 திங்கட்கிழமை முதல் ஒரு மாத காலத்திற்கு பாடசாலைக்கு அழைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாடசாலை அதிபர்களூடாக தற்போது உரிய பாடங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சிகளை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் எழுத்துமூல அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
அதன்படி சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக சமூக இடைவெளி பாதுகாக்கப்படும் வகையில் உரிய பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் விசேட கவனத்தினை செலுத்துமாறு சகல அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பிலான விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதியாக ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த விண்ணப்பதாரர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென்ற காரணத்தினால் மேற்படி விண்ணப்ப பத்திரங்களை பெற்றுக் கொள்வற்கான திகதியை ஆகஸ்ட் மாதம் 07சனிக்கிழமை வரையில் நீடிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.