சம்பிரதாய கல்வி முறைமையை மேம்படுத்துகின்ற அதேவேளை திறன்கள் அபிவிருத்தி தொடர்பிலும் அரசாங்கம் கூடுதல் கவனத்தினை செலுத்துகின்றதெனவும் சம்பிரதாய பல்கலைக்கழகங்களையும் அபிவிருத்தி செய்வதோடு தொழிற் பயிற்சியினை இரண்டாம் நிலைத் தேவையாக கருதாமல் சகல தரப்பினரதும் எதிர்காலத்திற்கு நேரடியாக தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகவே தற்போதைய அரசாங்கம் கருதுகின்றதெனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
ஒருகொடவத்தை, கைத்தொழில் ஒத்துழைப்பு பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ‘தொலைத்தொடர்பு தொழில்நுட்ப கற்கை’ பாடநெறியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 2021.07.16 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்குபற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது நாட்டிலுள்ள பிரதான நிறுவனங்கள் எம்மிடம் கூறுகின்ற பிரதான பிரச்சினையாக காணப்படுவது மூலதனம் அன்றி ‘பயிற்றப்பட்ட தொழிற்படை’ இல்லாமையே என்பதாகும். கணினி தொழில்நுட்பத் துறையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டங்களை 03 மடங்காக அதிகரிப்பதற்கு அதனுடன் தொடர்புடைய பயிற்றப்பட்ட தொழிற்படை இருந்தால் முடியும் என மேற்படி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அவர்களை உருவாக்குவதற்கு திறன்கள் அபிவிருத்தி என்பது மிக மிக அவசியமான ஒரு விடயமாகும். எனவே இதன் காரணமாகவே கல்வி அமைச்சுடன் இணைந்ததாக பிரிதான இராஜாங்க அமைச்சு ஒன்றினை உருவாக்குவதற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அவர்கள் 11 மாத காலமாக தொழிற் பயிற்சித் துறையில் பல வெற்றிகளைக் காணக்கூடிய வகையில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார். அதன்படி இதன் பலன்களை மிக விரைவில் தொழிற்பயிற்சித் துறையில் ஏற்பட்ட மாபெரும் முன்னேற்றங்களாக எமது நாட்டில் காண முடியும்.
தொலைத் தொடர்புக் கட்டமைப்பு தொடர்பாக கோட்பாட்டு மற்றும் செயன்முறை ரீதியான பயிற்சிகளை உள்ளடக்கிய கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பற்றியதான பயிற்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கோட்பாடு கற்கை காலப்பகுதியாக 06 மாதங்களும் செயன்முறைப் பயிற்சிக் காலப்பகுதியாக 12 மாதங்களும் என்ற வகையில் மேற்படி பாடநெறி தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை இதற்கான மத்தியஸ்தத்தினை வழங்கி மேற்கொள்ளும் பணி பாராட்டத்தக்கது.
மேற்படி நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் மற்றும் அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் நலின் கம்லத் அவர்கள் உட்பட பலரும் இணைந்து கொண்டனர்.