நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடப் புத்தகங்களை இழந்த பிள்ளைகளுக்கு புதிதாக புத்தகங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். 2021/06/08 ஆம் திகதி கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மேற்படி பிள்ளைகள் தமது பாடசாலையின் அதிபருக்கு இது தொடர்பில் அறிவித்ததன் பின்னர் அதிபர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்லது வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக கல்வி அமைச்சிற்கு அறிவிப்பார் எனவும் செயலாளர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த செயலாளர், 2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த திகதியை, தற்போது நாட்டில் நிலவும் கொவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக 2021 யூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.