கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் ஆங்கில ஊடக மொழி மூலமாக கல்வியை வழங்குவதற்குரியதாக கல்வி அமைச்சினால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் மாதிரி கருத்திட்டமாக அவ்வாறான பாடசாலைகளை மாகாண மட்டத்தில் ஆரம்பிப்பதற்கும் அதன் சாதகமான நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் அந்த வசதிகளை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த செயலாளர், தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொவிட் 19 தொற்று நோய் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திலும் பாரிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தமது பிள்ளைகளை சர்வதேச பாடசாலைகளில் சேர்த்துள்ள பெற்றோரிடமிருந்து தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன, ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் பாடசாலைகளில் மாதாந்த தவணைக் கட்டணத்தினை செலுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ள காரணத்தினால் அரச பாடசாலைக் கட்டமைப்பில் அப்பிள்ளைகளை இணைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுத் தரவேண்டுமென்று. இங்குள்ள பிரச்சினை யாதெனில் மேற்படி பிள்ளைகள் தமது கல்வியை ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் தரம் வரையில் தொடர்வதோ ஆங்கில மொழி ஊடகத்திலாகும். ஆனால் ஆங்கில மொழி மூல அரச பாடசாலைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையானவையே காணப்படுகின்றன. அவற்றிலும் ‘கட்டாயப்’ பாடங்கள் மாத்திரமே கற்பிக்கப்படுகின்றன. எனவே இதற்கு நிரந்தர தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். ஆகவே இந்த பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு கல்விசார் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் படி கொழும்பை அடிப்படையாகக் கொண்டும் சகல மாகாணங்களிலும் அவ்வாறானதொரு பாடசாலையை மாதிரிக் கருத்திட்டமாக ஆரம்பிப்பதற்குள்ள ஆற்றல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேற்படி கருத்திட்டம் வெற்றியடைகின்ற சூழ்நிலையில் நாட்டின் சகல பிரதேசங்களிலும் அவ்வாறான ஆங்கில மொழி ஊடக பாடசாலைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
1000 தேசிய பாடசாலைகள் நிகழ்ச்சித்திட்டம், மும்மொழிப் பாடசாலை நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றுக்கு இணையாக மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தினையும் எம்மால் நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கமைவாக விஞ்ஞானப் பிரிவில் உயர் தரக் கல்வியைப் பெறும் பிள்ளைகளின் எண்ணிக்கையினை 35% இலிருந்து 60% வரையில் அதிகரிப்பதற்கும், கலைப் பிரிவில் உயர் தரம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையினை 25% வரையில் குறைப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் நுகேகொட விஜயாராம வித்தியாலயத்தினை தேவி பாலிக்கா வித்தியாலயத்துடன் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்படவிருந்த கருத்திட்டத்தினை இரத்துச் செய்து அப்பாடசாலையினை ஆங்கில மொழி ஊடகப் பாடசாலையாக நிறுவுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.