அரசாங்கத்தின் டிஜிட்டல் கொள்கைக்கமைவாக பாவனையாளருக்கு மிகச்சிறந்த கையடக்கத் தொலைபேசி செயலியை (Mobile-App) (மூன்று மொழிகளையும் கொண்டதாக) Exams Sri Lanka-DOE என்ற பெயரில் அறிமுகம் செய்வதனூடாக பரீட்சைகள் திணைக்களத்துடன் தொடர்புடைய சகல சேவைகளையும் வீட்டிலிருந்தவாறே கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டின் மூலமாக மேற்கொள்வதற்கான வசதிகளை ஒட்டுமொத்த மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். மேற்படி கையடக்கத் தொலைபேசி செயலியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றதோடு, அதில் பங்குபற்றிய போதே அமைச்சர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
மேற்படி செயலியின் மூலமாக இணையவழிப் பயன்பாட்டுடன் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், பெறுபேறுகளை உறுதிப்படுத்திக் கொள்ளல், பரீட்சை இலக்கத்தைத் தேடுதல், அண்மித்த வருடத்தின் பாடசாலை பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடல், நிறுவன ரீதியான பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுதல் மற்றும் தரவிறக்கம் செய்தல், ஆரம்ப மாதிரி வினாக்கள், புள்ளிகள் வழங்கும் நடைமுறை (வினாப்பத்திரத்துடன்) மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளை தரவிறக்கம் செய்து கொள்ளல், புள்ளிவிபரங்கள் மற்றும் பாடசாலை அடைவு மட்ட சுட்டிகளை தரவிறக்கம் செய்து கொள்ளல், செய்திகள் மற்றும் அறிவித்தல்கள், பரீட்சை நாட்காட்டிகள், கடந்த கால (அண்மித்த 05 வருடங்களுக்கான) பரீட்சை வினாப்பத்திரங்களை தரவிறக்கம் செய்து கொள்ளல், விண்ணப்ப பத்திரங்களை தரவிறக்கம் செய்தல், இணையவழி பரீட்சைக் கட்டமைப்பு (GIT – Online Examinations System), பரீட்சை வினாப்பத்திரங்களை தரவிறக்கம் செய்து கொள்ளல், விண்ணப்பங்கள் கோரப்பட்ட பரீட்சைகள் (உரிய வர்த்தமானி அறிவித்தல்கள்), மாதாந்த நிறுவன ரீதியான பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுதல், பெறுபேற்று ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளல், (Online Application Module), இணையவழி மூலமாக பாடசாலை பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தல், இணையவழி மூலமாக நிறுவன ரீதியான பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய சேவைகளை தாம் இருக்கின்ற இடத்தில் இருந்தவாறே கையடக்கத் தொலைபேசி பாவனையின் மூலமாக எந்தவொரு நபராலும் நிறைவேற்றிக் கொள்ள முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.கே.பெரேரா, பரீட்சை ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித, அமைச்சரின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமாதர உட்பட பரீட்சை திணைக்களத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.