கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.
மும்மொழிப் பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமாக கல்வியின் முன்னேற்றப் பயணத்தினையும் அதேநேரத்தில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் பிள்ளைகளுக்கு தமது சகோதர மாணவ மாணவியரது விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்வதற்கும், கருத்துக்களை சரியாக தெரிவிப்பதற்கு மற்றும் பரிமாறிக் கொள்வதற்குமான பின்னணியை ஏற்படுத்துகின்றது. அதற்காக கோட்டை ராகுல வித்தியாலயத்தினை மும்மொழிப் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கோட்டை ராகுல வித்தியாலயத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
எமக்குத் தெரியும் இந்நாட்டில் சிங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியில் உரையாற்றுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் முடியாதிருப்பது மாபெரும் பிரச்சினையாகும். அதேநேரத்தில் தமிழ் பிள்ளைகளால் சிங்கள மொழியில் உரையாற்றுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் முடியாதிருப்பதும் மாபெரும் பிரச்சினையாகும். தமது தாய்மொழியில் மாத்திரம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் காரணமாக ஆங்கில மொழி கூட அவர்களுக்கு விடுபட்டுச் செல்கின்றது. இது மற்றுமொரு நபரை அடையாளம் காண்பதற்கும் அவரது விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்வதற்கும் தடையாக உள்ளது. எனவே இந்த குறைபாட்டை துரிதமாக நிவர்த்தி செய்வதற்கு மும்மொழிப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது மிகவும் அவசியமானதே. அதன்படி கோட்டை ராகுல வித்தியாலயமும் மும்மொழிப் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கென முன்மொழியப்பட்டுள்ள யோசனை மிகவும் வரவேற்கத்தக்கது. அதற்காக கல்வி அமைச்சின் ஒத்துழைப்பினை பெற்றுத்தர நாம் எதிர்பார்க்கின்றோம். எமது அரசாங்கத்தின் குறிக்கோளாக இருப்பதும் பிள்ளைகளுக்கு முழுமையான மற்றும் காலத்திற்கேற்ற கல்வியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதாகும்.
வகுப்பறைக்கு சென்று ஆசிரியர் சொல்வதைக் கேட்டு குறிப்பாக எழுதிக் கொண்டு பரீட்சைக்குத் தோற்றி மனனம் செய்தவைகளை எழுதி கூடிய புள்ளிகளைப் பெறுவதல்ல கல்வி என்பது. வாழ்க்கையில் சவால்களுக்கு முகம் கொடுக்கும் நடைமுறைச் சாத்தியமான பயிற்சியைப் பெற்றுத்தரும் கல்வி முறைமையொன்றினை எமது பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதே எமது குறிக்கோளாக உள்ளது. மாணவ மாணவியரது ஒட்டுமொத்த ஆளுமை விருத்தியை மேற்கொள்வது அவசியமாகும். விளையாட்டில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதென்பதும் அப்படியானதொரு விடயமே. எனவே இது மிகவும் பெறுமதியான சந்தர்ப்பமாகும். அத்துடன் பாடசாலைகளுக்கடையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை இந்த வகையில் படிப்படியாக குறைப்பதற்கும் சமூகத் தேவைப்பாடுகளை முன்னுரிமை அடிப்படையில் இனங்கண்டு அதனடிப்படையில் கல்வியின் திசையை மாற்றியமைப்பதற்கும் நாம் நடவடிக்கைகளை மெற்கொள்ளுதல் வேண்டும், எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, முன்னாள் விமானப்படைத் தளபதி மற்றும் மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க, மேல் மாகாண பிரதம செயலாளர் திருமதி. ஜயந்தி விஜேதுங்க, மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொகுவிதான, பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.