“மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட வகையில் சாதாரண தரப் பரீடசையை நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார்”
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி (01) திங்கட்கிழமை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படுவதாகவும், இம்முறை ஒன்பது நாட்கள் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், பரீட்சைக்கென ஆறு இலட்சத்து இருபத்திஇரண்டாயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளனர் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
கொவிட் தொற்றுநோய் நிலவுகின்ற சூழ்நிலையில் பரீட்சையை நடாத்துவது தொடர்பிலான சகல ஏற்பாடுகளும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள அதேவேளை, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுள் எவரேனும் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டால் அதற்கான முன்னேற்பாடாக சகல மாவட்டங்களிலும் ஆகக் குறைந்தது இரண்டு விசேட பரீட்சை நிலையங்களை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும், 4,513 பரீட்சை நிலையங்களில் இம்முறை பரீட்சை நடைபெறவுள்ளதோடு, மேலதிக விசேட பரீட்சை நிலையங்களை தயார்படுத்தி வைப்பதற்காக மாகாண ரீதியில் ஐநூறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்த அமைச்சர், ஒவ்வொரு மாகாணத்திலும் கல்விப் பணிப்பாளர்களுடன் இன்று முற்பகல் ஒன்லைன் வழியூடாக பரீட்சையை நடாத்துவது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டதாகவும் அதன்படி முழுமையான வேலைத்திட்டமொன்றின் கீழ் சகல நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதேசத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர், சுகாதார வைத்திய அலுவலர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளது ஆலோசனைகளைப் பெற்று மாணவர்களது முழுமையான சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பரீட்சை காலப்பகுதியில் போக்குவரத்து ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை புகையிரதத் திணைக்களம் மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என்பவற்றுடன் கலந்துரையாடியதாகவும், அந்த அப்படையில் அவர்கள் அதற்கென விசேட வேலைத்திட்டம் ஒன்றினை தயார்படுத்தி உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
யாதேனும் பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலைமை ஏற்படுமாயின் அந்நிலைமையானது பரீட்சையை நடாத்துவதற்கோ அல்லது மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு வருகை தருவதிலோ தடையாக இருக்கும் நிலைமையினை தவிர்த்துக் கொள்வதற்காக கடற்படை மற்றும் பாதுகாப்பு தரப்பினர் நேரடியாக தொடர்புபட்டிருக்கும் அதேவேளை, பரீட்சையை நடாத்துவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் மேற்படி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பெற்றோர் நிச்சயமாக திருப்தியடைய முடியுமென அமைச்சர் தெரிவித்தார்,
எந்த வகையான சவால்கள் வந்த போதிலும், பிள்ளைகளினது கல்விச் செயற்பாடுகளை தடையின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சானது தனது முழுமையான கவனத்தினை செலுத்தியுள்ளதாகவும், இம்முறை பரீட்சைக்கு உரிய காலம் கடந்து மாணவர்கள் தோற்றுகின்ற போதிலும் எதிர்வரும் ஜூன் மாதம் இப்பரீட்சைக்கான பெறுபேறுகளை வெளியிட்டு, ஜூலை மாதத்தில் அவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதே கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பு என்பதையும் கல்வி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
மேற்படி நிகழ்விற்கு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த, ஒன்லைன் வழியூடாக சகல மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சின் ஊடகச் செயலாளர் புத்திக்க விக்கிரமாதார உட்பட அதிகாரிகள் பலர் இணைந்து கொண்டனர்.