கல்வி அமைச்சின் செயலாளர்
புதிய பாடசாலை தவணைக்காக பிள்ளைகளை சுகாதார பாதுகாப்பான முறையில் பாடசாலைக்கு அழைத்து வர பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் சகல தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா தெரிவித்தார். பாடசாலைகளை திறப்பது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே கல்வி அமைச்சின் செயலாளர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டில் புதிய பாடசாலை தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானமாவது, மேல் மாகாணத்தில் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர ஏனைய சகல பாடசாலைகளும் ஜனவரி பதினோராம் (11) திகதி முதல் ஆரம்பிப்பதே என்பதாகும். அத்துடன், ஜனவரி மாதத்தில் சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளைப் பெற்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மேல் மாகாணத்தின் ஏனைய பாடசாலைகளில் தரம் 11 வகுப்புகளை ஜனவரி மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து மாகாணங்களிலும் மேற்படி விடயம் தொடர்பில் சுகாதாரத் துறையினரின் முழுமையான ஒத்துழைப்பினைப் பெற்று, சகல மாகாண, வலய, கோட்டக் க கல்விப் பிரிவுகள் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அத்துடன் சுகாதார மேம்பாட்டுக் குழுக்களின் ஒத்துழைப்புடனும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களின் ஒத்துழைப்பினையும் பெற்று சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகள் செயற்படுத்த வேண்டிய விதம் தொடர்பாக கல்வி அமைச்சினால் ஊடகங்கள் மூலமாகவும், அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் கடந்த ஆண்டு மூன்றாவது தவணைக்காக மீள திறக்கப்பட்டபோது ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களில் 98% தரப்பினர் சேவைக்கு வருகை தந்ததாகவும், மாணவர்களது வருகை படிப்படியாக அதிகரித்து வந்ததாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டிய அதேவேளை, புதிய பாடசாலைத் தவணை ஆரம்பிக்கப்படுகின்ற போது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முழுமையான நம்பிக்கையுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் தற்போது நிலவும் புதிய பொது நிலைமையைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் கட்டாயக் கல்விக்கான உரிமையைப் பாதுகாக்கும் சட்டரீதியான பொறுப்பை உணர்ந்த கல்வி அமைச்சு, பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தினை விரிவான திட்டத்துடன், சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் ஊடகங்கள் உட்பட அனைத்து தரப்பினரின் முழுமையான ஒத்துழைப்பினையும் பெற்று இதனை செயற்படுத்தும் எனவும் செயலாளர் மேலும் சுட்டிக் காட்டினார்.
மேலதிக கல்விச் செயலாளர் எல்.எம்.டி தர்மசேன, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, இலங்கை குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அபேக்ஷா பாலசூரிய, இலங்கை புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (வர்த்தகம்) வி.எஸ். பொல்வத்தகே, அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசேன மற்றும் பலர் இவ் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.