புதிய அரசின் கல்விக் கொள்கைகளுக்கமைவாக பிரதேச மட்டத்தில் 10 பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று கல்வி அமைச்சின் வோட் பிரதேச வளாகத்தில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது தற்போது உயர் கல்வி நிறுவனங்கள் நிறுவப்படாத 10 மாவட்டங்களை தெரிவு செய்து அம்மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை அமைப்பது தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பிலான அமைச்சரவை அனுமதி பெறல், உரிய கட்டுமானங்களை துரிதமாக ஆரம்பித்தல் மற்றும் மாணவர்களுக்கான அனுமதி வழங்கல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
மேற்படி கலந்துரையாடலில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள், பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன அவர்கள், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, உப தலைவர் பேராசிரியை சஜினி என். லியனகே, கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமாதர உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.