பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஏனைய சகல பிரிவுகளின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆலோசனைகளை பெற்று உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தீர்மானித்த திகதிகளில் தோற்றுவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். அதன் படி, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வகையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தினத்திலும், உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 திங்கட்கிழமை தொடக்கம் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரையிலும் நடைபெறும்.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நோய் பரவலுக்கு மத்தியில் எதிர்வரும் நாட்களில் நடாத்தப்படவிருக்கின்ற உயர் தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பான இணக்கப்பாடு எட்டுவது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ், வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ கே பெரேரா, பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த, தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர உட்பட பலரது பங்குபற்றலுடன் இவ்விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.பரீட்சை தொடர்பான பிள்ளைகளினதும் பெற்றோர்களினதும் எதிர்பார்ப்புகள் சிதறடித்து செல்ல இடமளிக்காது, சகல பரீட்சாத்திகளினதும், பரீட்சை நடவடிக்கைகளுடன் தொடர்புபடுகின்ற ஏனைய சகல தரப்பினரதும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனத்தினை செலுத்தி அரசாங்கத்தால் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், ஆபத்து நிலைமையினை உச்ச அளவில் குறைத்துக் கொள்வதற்கு சமூகத்தில் சகல தரப்பினரதும் முழுமையான ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகவும் இதன்போது கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார். பரீட்சை மண்டபங்களில் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள், முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், தனிநபர் இடைவெளி போன்ற சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை சரியான முறையில் பின்பற்றுவதற்கும், தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருக்கும் மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்களை பிரிதாக அமைப்பதற்கும், விசேடமாக மாணவர்களது போக்குவரத்து நடவடிக்கையின் போது விசேட சுகாதார பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றுவதற்கும் சுகாதார அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரையும் ஒன்றிணைத்ததான முழுமையான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதன் போது தெரிவித்தார்.உயர் தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களினதும் தனிப்பட்ட விபரங்கள், அண்மித்த நாட்களில் அவர்களுக்கு ஏற்பட்ட நோய்த்தாக்கங்கள் உட்பட சகல விபரங்களையும் கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தினூடாக வெளியிடப்படும் பத்திரத்தின் மூலமாக இயங்கலை (ஒன்லைன்) வாயிலாக பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், அப்பத்திரத்தின் மூலமாக உரிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு பெற்றோரின் முழுமையான ஒத்துழைப்பினை தாம் எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
Thursday, 08 October 2020
/
Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்