நாட்டிலுள்ள அறநெறிப் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் கல்வி வசதி அபிவிருத்தி மற்றும் சமமான வளப் பகிர்வு தொடர்பில் ஆய்வு செய்து, அந்த ஆய்வு அறிக்கையின்படி கல்வி அமைச்சு அதற்கு தேவைன வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமென கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடெங்கிலும் காணப்படுகின்ற 80 இற்கும் மேற்பட்ட பிரிவெனாக்கள் மற்றும் 11000 மேற்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாக நேற்று (25 திகதி) உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சந்திப்பின்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“எமது நாட்டில் பாடசாலை கட்டமைப்புக்கு வழங்கப்படுகின்ற முன்னமையில் சிறிதளவேனும் பிரிவெனாக்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அதனால், உடனடியாக அது பற்றிய தகவல்களைத் திரட்ட வேண்டியுள்ளது. குறிப்பாக, இவற்றுக்கு கிடைக்கும் வசதிகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது. ஒருசில அறநெறிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கதிரைகள் கூட இல்லை. ஒரு சில பாடசாலைகளுக்கு கிடைக்காத வசதிகள் சில பிரிவெனாக்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கிடைக்கின்ற நிலையில் மற்றும் சில அறநெறிப் பாடசாலைகளில் அமர்வதற்கு கதிரை கூட இல்லாத நிலை கவலை தருகிறது. அதனால், வளங்கள் சமமாக பகிரப்படும் வகையில் தேவையான மாற்றங்களை செய்வதற்கும் வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அத்தோடு அங்கு போதிக்கப்படும் கல்வி தொடர்பில் சரியான மதிப்பீடு, ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தலும் தேவைப்படுகின்றது.
சங்கத்தினருக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், கடந்த அரசாங்கத்தால் பிரிவெனாக்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகள் தொடர்பில் உரிய கண்காணிப்பு இடம்பெறவில்லை. நாங்கள் உடனடியாக அந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அனைவருக்கும் சமமான வகையில் வசதிகளை ஏற்படுத்தி அவற்றை உரிய முறையில் ஒழுங்குபடுத்துவதற்கு மேற்பார்வை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பிற நாடுகளுக்குச் சென்று பௌத்தக் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசில்களை வழங்குதல், பல்கலைக்கழக கல்விக்கான புலமைப் பரிசில்களை வழங்குதல் தொடர்பில் ஆராய வேண்டும் எனவும், வெளிநாடுகளில் கல்வி பயில்கின்ற, அந்தந்த நாடுகளில் வசித்து வருகின்ற சங்கைக்குரியவர்களின் ஒத்துழைப்பை இதன்பொருட்டு பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து தெரிவித்த மாண்புமிகு இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட,
“அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஓராண்டில் 5000 ரூபா நூலகக் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. இத்தொகையை அதிகரிப்பதற்குள்ள வாய்ப்புகள் தொடர்பாக ஆராய வேண்டும். அதேபோல், அறநெறிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் 33 இலட்சம் மாணவர்களுக்கு மேலதிகமாக அறநெறிக் கல்வியைப் பெறாத மாணவர்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பாடசாலைக் கல்வி பயில்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை 45 இலட்சத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில் அறநெறி கல்விப் பெறாத மாணவர்களை அதன்பால் ஈர்த்தெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த எண்ணிக்கையை 35 இலட்சமாக உயர்த்துவதே எமது இலக்காக அமைய வேண்டும். அதேபோல், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் சம்பளம் மற்றும் படிகள் வழங்குவது தொடர்பாகவும் ஆராய வேண்டும்” என தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர்.