கல்வி அமைச்சர் பேராசிரியர் கௌரவ ஜீ.எல் பீரிஸ் நாட்டின் கல்விச் செயன்முறையின் வளர்ச்சி தொடர்பாக மாகாண ஆளுநர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர், மாணவர்கள்,அரச உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட ஏற்புடைய இதர தரப்புகளை இணைத்துக்கொண்டு இன்றளவில் காணப்படுகின்ற பாடவிதானங்கள் மற்றும் கற்பித்தல் செயன்முறைகளை திருத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்வது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
கொள்கையாக்கம் மற்றும் செயற்படுத்தல் தொடர்பான அரசாங்கத்தின் அனுகுமுறை மேலிருந்து கீழ் நோக்கிச் செல்வதாக இல்லாமல் கீழிருந்து மேல் நோக்கிச் செல்வதாக உள்ளதால் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அது தொடர்பாக ஏற்புடைய சகல தரப்புகளினதும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டியது மிக முக்கியமென அமைச்சர் இங்கு சுட்டிக் காட்டினார்.
பாட உள்ளடக்கங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கிடையிலான தொடர்புகள், கல்விச் செயற்பாடுகளின் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொழில்சார் கல்வித் திட்டங்களுக்குள் பல தரப்பு அனுகுமுறைகளை ஏற்படுத்தல் மற்றும் கோவிட் நிலைமைக்கு பின்னரான ஒன்லைன் செயன்முறை ஊடாக கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்தல் பெரும் வரவேற்பினை பெறக்கூடிய விடயங்கள் என்பதும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
வட மத்திய ஆளுநர் மஹிபால ஹேரத், மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, வட மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசம்மில், தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், ஊவா மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே, வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம் சார்ள்ஸ் ஆகியோர் இக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
அறநெறி பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவென மற்றும் பௌத்த பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சர் விஜித்த பேருகொட, ஆற்றல் விருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சிகள் மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோரும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.