நாட்டிலுள்ள சகல மாணவர்களுக்கும் கல்வியில் சமமான வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கமாகும் எனவும், அதன் ஒரு நடவடிக்கையாக எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டில் உயர்தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் எனவும், அதன்போது புதிய தொழில்நுட்பத்துடன் நேரடியாக இணைந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க முடியுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதனடிப்படையில் இலங்கையில் உயர்தர வகுப்புகளைக் கொண்ட 3,000 பாடசாலைகள் டிஜிட்டல்மயப்படுத்தப்படவுள்ளதுடன், இதற்குரியதான ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் திறன் பலகைகள் (Smart Interactive Board) வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதற்கிணையாக சகல கல்வி வலயங்களிலும் நிறுவப்பட்டுள்ள கணினி வள நிலையங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நாடு முழுவதும் எண்ணெய் வரிசைகள், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, எரிவாயு இன்றி, பாடசாலைகள் மூடப்பட்டிருந்த சவால் மிகுந்த காலப்பகுதியில் தாம் கல்வி அமைச்சராக பதவியைப் பொறுப்பேற்றதாகவும், அந்நிலையிலிருந்து விடுபட்டு மீண்டும் முறையான பாடசாலைக் கல்விக் கட்டமைப்பினை பேணிச் செல்வதற்கு மிகக் குறுகிய காலப்பகுதியினுள் அவசியமான சரியான தீர்மானங்களை மேற்கொள்ள முடிந்துள்ளது என்பதையும் அமைச்சர் இதன்போது நினைவு கூர்ந்தார். பிள்ளைகளின் நலனுக்காக நாட்டின் கல்விக் கட்டமைப்பினை மேம்படுத்துவதற்கு சகல தரப்பினரதும் அர்ப்பணிப்பு அவசியமானதாக உள்ளதெனவும், எதிர்வரும் சில வாரங்களில் நாட்டின் சகல மாகாணங்களுக்கும் சென்று இது தொடர்பாக சகல கல்வி அதிகாரிகளை தெளிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது விருதுபெற்ற பேராசிரியர் சிவா சிவநாதன் அவர்களின் நிதி அன்பளிப்பினூடாக மேற்படி பாடசாலைக்கு திறன் பலகைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. இந்நிகழ்விற்கு விருதுபெற்ற பேராசிரியர் சிவா சிவநாதன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள், கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் இந்துக் கல்லூரியின் அதிபர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
- Ministry
- Circulars
- Ministry Structure
- Static Reports
- Procurement Notices
- Special Projects
- Divisions
- Academics