அதிபர் சேவையில் இதுவரையில் தீர்க்கப்படாது நிலவிவந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மேற்படி சேவையின் தொழில்சார் தன்மையை மேம்படுத்தி கல்விச் சீர்திருத்தங்களுக்கு பொருந்தும் வகையில் அபிவிருத்திச் செய்வதற்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் மிக முக்கியமான ஆறு விடயங்களூடாக பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்குரியதான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிபர் சேவையினை அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலாக மேம்படுத்துதல், அதிபர் சேவைக்கான தேசியக் கொள்கையைத் தயாரித்தல், சேவைப் பிரமாணங்களைத் திருத்தியமைத்து எதிர்காலத்திற்குப் பொருத்தமான வகையில் கட்டமைத்தல், அதிபரின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் பொறுப்புக்கூறல், அதிபர்களின் ஊதியங்கள், கொடுப்பனவுச் சலுகைகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் மற்றும் கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஆகிய விடயங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.
தற்போது 16,000 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்களைக் கொண்டுள்ள அதிபர் சேவையின் iii, ii, i ஆகிய தரங்களைச் சேர்ந்த அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உப அதிபர்களின் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் பாடசாலைக் கட்டமைப்பின் புதிய தேவைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு உயர் தரத்திலான அதிபர் பதவியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சம்பளத் திருத்தங்கள் மற்றும் சம்பள முரண்பாடுகளை அகற்றுதல், அதிபர்களுக்கான கொடுப்பனவை 6,000.00 ரூபாவிலிருந்து 15,000.00 ரூபாவாக அதிகரித்தல், அரச சேவையின் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற தொடர்பாடல், பயணச் செலவுகள், வாகனங்கள் மற்றும் வீடுகள் உட்பட பலவகையான சலுகைகள் மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள அதிபர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குதல் ஆகியனவும் இந்தக் குழுவின் பரிந்துரைகளில் அடங்கியுள்ளன.
மேற்படி குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவையின் அங்கீகாரம், சேவைப் பிரமாண திருத்தங்கள், அமைச்சின் சுற்றறிக்கைகள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் கல்விசார் அதிகாரிகளுடன் நடாத்திய கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தக் குழுவின் தலைவராக கல்வி அமைச்சரின் ஆலோசகர் திரு.குணபால நாணயக்கார அவர்கள் மற்றும் முன்னாள் தாபனப் பணிப்பாளர் நாயகங்களான எம்.ஏ.தர்மதாச, பத்மா, சிறிவர்தன, முன்னாள் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித, ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் தலைமையதிபதி எஸ்.டபிள்யூ.கமகே ஆகியோர் குழு உறுப்பினர்களாக செயற்பட்டனர்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி கல்வி அமைச்சின் இணையதளத்தின் (www.moe.gov.lk) ஊடாக இந்த அறிக்கை வெளியிடப்படும்.