முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் 20 பாடசாலைகளை மையப்படுத்தி ஜுன் 20 ஆம் திகதி ஆரம்பம்
சர்வதேச கல்வி மட்டத்திற்கு இணையாக இந்நாட்டின் கல்வித் துறையையும் கட்டியெழுப்பும் குறிக்கோளுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடங்களை 2024 ஆம் ஆண்டிலிருந்து 6 – 9 மற்றும் 10 – 13 வரையான தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் முன்னோடிக் கருத்திட்டம் ஜுன் மாத இறுதியில் தெரிவுசெய்யப்பட்ட 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேஜயந்த அவர்கள் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் நினைவு தினத்தையொட்டி நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் பரிசு வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் இந்த பாடங்களை கற்பிப்பதற்கு மேலதிகமாக மாணவ சமூகத்தினரிடையே ஆங்கில மொழிப் பயன்பாட்டினை விரிவாக பிரபல்யப்படுத்துவதற்காக பல்வேறான படிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அந்த நிலைமையை மென்மேலும் விரிவுபடுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதனடிப்படையில் இந்த வருடத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட வேளையில் நாடு தழுவிய வகையில் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டிலிருந்து பிள்ளைகளுக்கு ஆங்கில மொழிக் கல்வியை நடைமுறை ரீதியாக பேசுவதற்கான பயன்பாட்டினை ஆரம்பித்ததாகவும் சம்பிரதாய வகையில் தரம் 3 இலிருந்து ஆங்கில மொழிக் கல்வியை கற்பதனால் சபைக்கூச்சம் போன்ற காரணங்களால் அம்மொழி தொடர்பிலான ஆர்வம் மாணவர்களிடத்தே குறைவடைந்து காணப்படுகின்ற நிலைமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். எமது நாட்டு மாணவர்களிடத்தில் பெரும்பாலும் ஆங்கில மொழி பயன்பாடு தொடர்பில் மிகச்சிறந்த எழுத்தாற்றல் மற்றும் புரிந்துகொள்ளும் திறமை காணப்பட்ட போதிலும் யாதேனுமொரு விடயத்தினை ஆங்கில மொழியில் மற்றையவர்களுக்கு விளக்கப்படுத்துவதில் காட்டும் இயலாமையை இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதனூடாக இல்லாதொழிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் சாதாரண கல்வி முறைமையின் கீழ் வகுப்பறையினுள் பெற்றுக்கொள்ளும் எண்ணக்கரு ரீதியான அறிவினை வகுப்பறையிலும் அதற்கு வெளியிலும் நடைமுறை ரீதியாக பயன்படுத்தக்கூடிய வகையிலான ஸ்டீம் கல்வி முறைமையினை பாடசாலைக் கட்டமைப்பினுள் நடைமுறைப்படுத்துவதனூடாக கல்விசார் பரிமாற்றச் செயற்பாட்டினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி விஞ்ஞானம், தொழில்நுட்ப விஞ்ஞானம்,கணிதம் மற்றும் கலை ஆகிய விடயத்துறைகளை அடிப்படையாகக் கொண்டு ஸ்டீம் கல்வியை ( STEAM- Science, Technology, Engineering, Arts, Mathematics) நடைமுறைப்படுத்தவதன் மூலம் பரீட்சைகளுக்காக நீண்டகாலமாக பல அழுத்தங்களுக்கு மத்தியில் தயாராகும் நிலைமை அவசியமாகாது எனவும் வருட இறுதிப் பரீட்சைகளில் கூடுதல் புள்ளிகளைப்பெற வேண்டிய தேவைப்பாடு ஏற்படாதெனவும் ஒவ்வொரு நாளும் வகுப்பறையினுள் செய்யும் நடைமுறைச்சாத்தியமான மொடியுல் முறைமையினூடாக கூடுதலான புள்ளிகளை மாணவர்கள் மிக இலகுவாக பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டார்.