– உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் சாதாரண தரப் பரீட்சையை நடாத்துதல் என ஒரே சந்தர்ப்பத்தில் பணிகளை மேற்கொள்ளும் சவாலுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெற்றிகரமாக முகம்கொடுத்துள்ளது.
-கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கம் செலுத்தும் வணிக மற்றும் வர்த்தக பாடங்களைக் கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் குறித்த அந்த பாடங்கள் பற்றிய தத்துவார்த்த அறிவினையும் நடைமுறை ரீதியில் பயன்பாட்டில் கொண்டிருக்கும் வங்கிகள் போன்ற நிறுவனங்களுக்கு சென்று கோட்பாட்டு விடய அறிவின் நடைமுறைப் பயன்பாடு பற்றிய விடய உள்ளடக்க அனுபவத்தினையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற விடயத்தினை தாம் முன்மொழிவதாகவும் அதற்குத் தேவையான எழுத்துமூல அனுமதியினை சுற்றறிக்கையொன்றின் வாயிலாக பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனம் (CMA) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மிகச்சிறந்த பாடசாலை வணிக சங்கத்தை தேர்வு செய்வதற்கான போட்டியில் பரசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணைந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்தினைத் தெரிவித்தர்.
அத்துடன் சவால்மிக்கதொரு வருடமாக அமைந்த 2022 ஆம் ஆண்டுக்குரிய உயர் தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளை 2023 ஆம் ஆண்டில் நடாத்தியதோடு தற்போது நாடுமுழுவதும் 3500 பரீட்சை நிலையங்களில் சாதாரண தரப் பரீட்சையையும் நடாத்துகின்ற அதேவேளை, உயர் தர ப் பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் சவாலுக்கு பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து கல்வி அமைச்சும் மிக வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். நான்கு விடயத்துறைகளூடாக நடாத்தப்பட்ட உயர் தரப் பரீட்சையினதும் தற்பொழுது நடைபெற்று வரும் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளையும் எதிர்வரும் ஜுன் மாத இறுதியில் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டில் அடைய வேண்டிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை குறிக்கோளாகக் கொண்டு அறிவினை இற்றைப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக முயற்சிக்க வேண்டுமென அமைச்சர் சுட்டிக் காட்டினார். அவ்வாறு இடம்பெறாத காரணத்தால் காலம் கடந்து போயுள்ள தற்போதைய கல்வி முறைமையினுள் துரித மாற்றத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாடத்திட்ட திருத்தங்கள் மூலமாக பிள்ளைகளின் இடது மற்றும் வலது மூளை ஆகிய இரு பிரிவுகளையும் விருத்தி செய்யக் கூடிய வகையில் பாடங்களையும் கற்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதோடு மருத்துவம் கற்கின்ற மாணவர்களுக்கு சங்கீதம் போன்ற கலைப் பாடங்களைக் கற்பதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறு மேற்கொள்ளவில்லையெனில் மிக விரைவில் பாடசாலைக் கட்டமைப்பினுள் முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி மாத்திரமே எஞ்சியிருக்கும் எனவும் தெரிவித்த அமைச்சர், அதனடிப்படையில் கல்வியில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்றளவில் முதலாம் தரத்திலிருந்தே பிள்ளைகளை ஆங்கில மொழிக் கல்விப் பயன்பாட்டிற்கு பழக்கப்படுத்துவதற்கும் ஸ்டீம் கல்வி முறைமைக்கு இசைவாக்கம் அடையவைப்பதற்கும் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதனடிப்படையில் முன்னோடிக் கருத்திட்டமொன்றினை நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 20 பாடசாலைகளில் தரம் 6-9 மற்றும் 10-13 வரையிலான பிள்ளைகளுக்கு தகவல் தொழில்நுட்பப் பாடத்தையும் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உரிமைகளுக்காக போராடுகின்ற அதேநேரத்தில் தமது கடமைகள் பற்றிய தெளிவுடன் பிள்ளைகளின் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் சமூகமாக முன்வர வேண்டுமெனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.