தொழிலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கனவை நனவாக்கும் ‘Sri Lanka Skills Expo 2023’ கண்காட்சி 2023 மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தின் சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி வளாகத்தில் நடைபெறுவதோடு அதன் ஆரம்ப நிகழ்வு நாளை முற்பகல் 9.00 மணிக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மேற்படிக் கண்காட்சி முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 8.00 மணிவரையில் மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என்பதுடன், கண்காட்சிக்கான நுழைவு முழுமையாக இலவசமாகும்.
இதுவொரு தேசிய மட்டத்திலான மாநாடு மற்றும் கண்காட்சி என்பதோடு தேர்ச்சி மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் தேசிய மற்றும் சர்வதேச பங்காளர்களை ஒரே மேடைக்கு அழைத்து வருவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக இலங்கையில் முதலாவது தடவையாக நடாத்தப்படும் திறன்களுக்கான கண்காட்சியாக இது ஏற்பாடு செய்யப்படுகிறது.
கட்டுமானக் கைத்தொழில் திறன்கள் சபை (CISC), தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கைத்தொழில் திறன்கள் சபை (ICTISC), உற்பத்தி மற்றும் பொறியியல் துறைசார் திறன்கள் சபை (MESSCO), சுற்றுலாக் கைத்தொழில் திறன்கள் சபை (TISC) மற்றும் கமத்தொழில் துறைசார் திறன்கள் சபை (ASSC) ஆகிய துறைசார் திறன்கள் சபைகளுக்குரிய கைத்தொழில் துறைகளில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் “Sri Lanka Skills Expo 2023” கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேற்படி கைத்தொழில்கள் தொடர்பில் தற்போதைக்கு நிலவும் தொழில்நுட்ப பயிற்சி நிகழ்ச்சிகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தல், தொழில் வெற்றிடங்கள் தொடர்பான தரவுகளை பரிமாறிக்கொள்ளல், மேற்படி தொழில்வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தொழிலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களை வழிநடாத்துதல் போன்ற விடயங்களை மேற்கொள்வதற்கான சிறந்த தளமாக இந்த கண்காட்சி அமையும். தனியார் துறையில் நிலவும் திறன் வாய்ப்புகள் மற்றும் தொழில் தேவைப்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டுவதும் இந்த கண்காட்சியின் மற்றுமொரு குறிக்கோளாகும்.
மேலே தெரிவிக்கப்பட்ட ஐந்து துறைகளுக்குரியதாக தற்போது நிலவும் தேவைப்பாடுகள் மற்றும் மேற்படி துறைகளில் நிலவும் தொழில் சந்தர்ப்பங்கள் தொடர்பில் மக்களை தெளிவூட்டுவதற்கான விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் பலவும் இந்த கண்காட்சிக்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மற்றும் தொழிலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு துறைசார் வல்லுநர்கள் மற்றும் தொழில் வழங்குநர்களை சந்திப்பதற்கும் உரிய துறைகளில் நிலவும் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் தெளிவடைவதற்கும் இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும். இதனூடாக உரிய துறைகளின் பிரதிபிம்பத்தினை மேலும் வளர்ச்சியடைய வைப்பதற்கும், தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் திறன்கள் விருத்தி தொடர்பிலான ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், தொழில் சந்தை பற்றிய தகவல்கள் மற்றும் தரவுகளை பரிமாறிக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.