கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் கோரிக்கை
– உயர் தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் காலதாமதம் அடைவதால் சாதாரண தரப் பரீட்சையும் தாமதமடையலாம்
- 40 இலட்சம் மாணவர்களின் உரிமைகளைப் பற்றி யாரும் கதைப்பதில்லை
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடாத்தி முடித்த போதிலும் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள காரணத்தினால் பொதுவாக இரண்டு பரீட்சைகளுக்கிடையில் காணப்பட வேண்டிய சுமார் மூன்று மாத கால இடைவெளி குறைவடைவதனூடாக எதிர்வரும் காலப்பகுதியில் நடாத்தப்படவுள்ள சாதாரண தரப் பரீட்சையும் பெரும்பாலும் தாமதமடைவதற்கான வாய்ப்புள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார்.
கொவிட் பேரிடர் காரணமாக தவறவிட்ட பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை ஈடுசெய்து கொள்வதற்கு முயற்சிக்கும் உலகில் எந்த ஒரு நாடும் பிள்ளைகளை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையிலான தொழிற்சங்க நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை எனவும், 40 இலட்சம் பிள்ளைனைதும் அவர்களது பெற்றோர் சுமார் 80 இலட்சம் பேரினதும் உரிமைகள் மீறப்படுவதனைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் தான் அந்தக் குழுவினர் சார்பாகவே செயற்படுவதாக தெரிவித்த அமைச்சர், சர்வதேசப் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று சிறப்பாக இடம்பெற்று வருவதாகவும், இந்த தொழிற்சங்க செயற்பாடுகள் காரணமாக கல்விச் செயற்பாடுகள் தடைபடுவதுடன் அதனால் கூடுதலாக பாதிக்கப்படுவதும் அநீதி இழைக்கப்படுவதும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு சிரமங்களுடன் வாழும் கீழ்மட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கே எனவும் தெரிவித்தார்.
பாடசாலை மதிய உணவுத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் (Julie Chung) அவர்களுடன் இன்று மட்டக்குளி புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்திற்கு கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், விடைத்தாள்களை சரிபார்க்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் வழங்குவதற்கு விசேட அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து வழங்குவதாகவும் கல்வி விடயத்தில் வரையறுக்கப்படாத அரசின் வரிக்கொள்கை போன்ற விடயத்திற்குக் கூட திறைசேரிக் கோரிக்கைகள் மூலம் தலையீடு செய்து வரிச்சுமையை குறைப்பதற்கு அரசின் கவனத்தைச் செலுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார். அதன்படி, பல்கலைக்கழக ஆசிரியர் சமூகம் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணைந்து மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.