சகல பாடசாலைகளிலும் சாதகமான கற்றல் சூழலை பேணிச்செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று கல்வியமைச்சில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை விவகாரங்களுடன் தொடர்புடைய வேறு பல உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது வகுப்பறை மற்றும் பாடசாலை வளாகத்தை மகிழ்ச்சிகரமான இடமாகவும் சிறுவர்கள் மனத் திருப்தியுடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய இடமாகவும் மாற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் தற்போதுள்ள சுற்றறிக்கைகளில் மேலதிக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து அதிபர்களுக்கு மீண்டும் தெரியப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் மாணவர்களின் பைகளை பரிசோதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள்/தலைவிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் அதிபர்கள் அதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.