நான்காவது தொழில்நுட்பப் புரட்சியின் முதலாவது மட்டத்தையேனும் அடைய வேண்டுமெனில், பிள்ளைகளின் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவது மிக மிக அவசியம்.
-கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
மீநுண் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடங்களை பல்கலைக்கழக பாடநெறிகளில் உட்புகுத்தி எமது பிள்ளைகளின் அறிவினை உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளில் உயர் கல்வியைப் பயில்கின்ற பிள்ளைகளின் அறிவுக்கு இணையாக்க வேண்டுமெனவும் இன்றளவில் வெளிநாடுகளுக்குச் சென்று சர்வதேச மட்டத்திலான கல்வியைப் பெற்று இந்நாட்டுக்கு வருகை தரும் பிள்ளைகளுக்கு அந்த அறிவுக்கு இணையான தொழிற்றுறை இங்கு இல்லாமை சிக்கலைத் தோற்றுவித்துள்ளது எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
பேராசிரியர்களின் இணக்கப்பாட்டுடன் உயர் கல்வி பாடத்திட்டங்களை பல்கலைக்கழக மட்டத்தில் நவீனமயப்படுத்துவதுடன் பாடசாலை மட்டத்தில் இடைநிலைக் கல்வியியையும் அதற்கு பொருந்தக்கூடிய வகையில் நவீனமயப்படுத்தி 13 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவினை மேற்கொள்ள வேண்டுமெனவும் இப்புதிய கல்விக் கொள்கைகளுக்கு அமைவாக முன்னேற்றத்தினை வெளிப்படுத்தாத பிள்ளைகளை 9 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொழிற்பயிற்சிக் கல்வியில் ஈடுபடுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கின்ற அமைச்சர், செயற்கை நுண்ணறிவுப் பாடத்தினை 10 ஆம் ஆண்டு தொடக்கம் கற்பிப்பதனூடாக உயர் கல்வியிலும் இடைநிலைக் கல்வியிலும் நவீனமயப்படுத்தலை மேற்கொண்டு ஆரம்பக் கல்வியிலும் உரிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இம்மூன்று பிரிவுகளிலும் கல்விசார் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமென சுட்டிக் காட்டுகின்றார். அந்த வகையில் எமது கல்வி இற்றைப்படுத்தப்படாவிடின் நான்காவது தொழில்நுட்பப் புரட்சியின் நன்மைகளை எமது பிள்ளைகளால் நெருங்கவும் முடியாதென அமைச்சர் தெரிவித்தார்.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சில் நடாத்தப்பட்ட ‘குரு பிரதீபா பிரபா 2022’ தேசிய நிகழ்வில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதன்போது ஆரம்பக் கல்வி தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர், பாடசாலைகள் இயங்காதிருந்த கடந்த காலப்பகுதிகளில் 1,2,3… ஆகிய தரங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்வி மட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகளின் படி, அடையாளம் காணப்பட்டுள்ள பின்னடைவுகளை சீர்செய்வதற்கு எதிர்காலத்தில் துரித பல வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படுமெனக் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு மாதங்களாக கல்விசார் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதனை விடவும் நீண்ட காலமாக தீர்க்கப்படாது இழுபறி மட்டத்தில் நிலவிய கல்விசார் ஆசிரியர்களின் நிர்வாக சிக்கல்கள் பலவற்றிற்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சவாலான முடிவொன்றை எடுத்துள்ள கல்வி அமைச்சர், எதிர்காலத்தில் வெட்டுப்புள்ளிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள எந்தவொரு பாடசாலைக்கும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையினூடாகவே மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்களே தவிர, வேறெந்த வகையிலும் தரம் 1 முதல் 13 வரையில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கிறார். அவ்வாறு செய்யாவிடின் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவது தவிர்க்க முடியாது எனவும், வகுப்பறை ஒன்றினுள் மாணவர்களின் எண்ணிக்கை 60 என்ற எல்லையையும் தாண்டிச் சென்று ஆசிரியராலும் கூட வகுப்பறையில் இருக்க முடியாத வகையில் ஏற்பட்டுள்ள பொருத்தமற்ற கற்றல் சூழலை மாற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக அமைகின்ற தேசிய பாடசாலைகள் எண்ணக்கருவினை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக முன்னணிப் பாடசாலைகள் என்ற எண்ணக்கருவினை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாடசாலை வளாகத்தின் கண்காணிப்பு மற்றும் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிபர்களுக்கான சந்தர்ப்பத்தினை விரிவாக்கி எதிர்காலத்தில் பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகளுக்காக நடாத்தப்படுகின்ற ஆசிரியர் பரீட்சையில் போதியளவான புள்ளிகளைப் பெறாதவர்கள் அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்கான அதிகாரிகளாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆசிரியர் தின நிகழ்வின் போது 1990களில் இருந்த ஆசிரியர் தொழிற்சங்கங்களின் வரலாற்றை நினைவு கூர்ந்த அமைச்சர், இக்காலப்பகுதிகளைப் போன்று முறையான நடைமுறை ஒழுங்குகள் காணப்படாதிருந்த அக்கால கட்டத்தில் மிகக் கடுமையான தண்டனை இடமாற்றங்களைப் பெற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போதும்கூட ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்கு சென்று வருகைக்கான ஆவணத்தில் கையொப்பத்தினை இடாமல் பிள்ளைகளுக்கான கற்பித்தல் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டார்களெனத் தெரிவித்தார்.
அடுத்த வருடத்தில், தரம் 1 முதல் ஆங்கில மொழிப் பயன்பாட்டினை நடைமுறை ரீதியாக ஆரம்பிப்பதோடு புதிய வலயக் கல்வி அலுவலகங்களை தேவையான வகையில் தாபித்து புதிய அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு கல்வித் துறையின் நிர்வாக நடவடிக்கைகளை முறைமைப்படுத்துவதன் மூலம் கல்விச் சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தை உருவாக்கும் சவாலை கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதோடு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அதற்கு அவசியமெனவும் அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு மாகாணத்திலிருந்து 10 ஆசிரியர்கள் மற்றும் 5 அதிபர்கள் என்றவாறு 135 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் ஜனாதிபதி அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் அவர்களும் பிரதமரின் வாழ்த்துச் செய்தியை இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட அவர்களும் அங்கு தெரிவித்த அதேவேளை, இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், கல்விச் செயலாளர் எம். என். ரணசிங்க அவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.