பயிற்றப்படாத, அதிக வயதினையுடைய பட்டதாரிகள் இந்நாட்டின் ஆசிரியர் பணிக்கு இணைத்துக்கொள்ளப்படுவதில்லை… கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள்.
உலகின் தரமான கல்வியில் முதலிடத்தைக் கொண்ட பின்லாந்தின் கல்விக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின்படி, ஒருவர் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் கடினமான தொழிலாக ஆசிரியர் தொழில் காணப்படுகின்றது. போட்டிப் பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகளை நடாத்தி 4 வருட விசேட பயிற்சிக்குப் பிறகு, இணைத்துக் கொள்ளப்படுகின்ற ஆசிரியர் மீது பின்லாந்தில் உள்ள பெற்றோர்கள் முழு நம்பிக்கை வைக்கின்றனர். அந்நாட்டில் தரம் 1 முதல் தரம் 9 வரையிலான பிள்ளைகளுக்கு எதுவிதமான பொதுப் பரீட்சைகளும் நடாத்தப்படுவதில்லை. தமது பிள்ளைகளை ஆசிரியரின் மேற்பார்வைப் பொறுப்பில் ஒப்படைக்கின்ற பெற்றோர்கள் ஆசிரியரின் மதிப்பீட்டின் அடிப்படையில் மாத்திரம் 100% திருப்தி அடைகின்றனர். மேலும் தனிப்பட்ட முறையில் விசேட கவனத்தைச் செலுத்தாமல் பிள்ளைகளின் குறைபாடுகளை சீர்செய்து, அதிகமாக பணியாற்றி முறையான பொறுப்புடனும் சமத்துவத்துடனும் பணியாற்றும் ஆசிரியர்கள் பெற்றோரின் நம்பிக்கையைப் பெற்றவர்களாக திகழ்கின்றனர். சிங்கப்பூரின் கல்வி முறையில், பரீட்சைகள், தேர்வுகள் நடாத்துவதை பிள்ளைகளுக்கு மாத்திரம் வரையறுக்காமல் ஆண்டுதோறும் ஆசிரியர்களின் செயற்றிறனை மதிப்பீடு செய்வதும் விசேட அம்சமாகும். நாவல, ஆனந்த மகளிர் கல்லூரியின் மாணவத் தலைவியர்களுக்கு உத்தியோகபூர்வ பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன் போது மேலும் உரையாற்றிய அவர், அரசியல்வாதிகளின் செயலாற்றுகைகளும் அளவிடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். கடந்த காலங்களில் மக்கள் அதற்காகப் போராடியதாகவும், தற்போதுள்ள முறைமை மாற்றப்பட்டு அதனூடாக சமூகம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறைமையில் இன்றியமையாத சாதகமான நடவடிக்கையை மேற்கொண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் எந்தவொரு பாடசாலையிலும் சாதாரண தரம் வரையிலான எந்தவொரு இடைநிலை வகுப்புகளுக்கும் மாணவர்களை இணைத்துக்கொள்ளாதிருப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் இங்கு தெரிவித்தார். இவ்வாறானதொரு முறைமை இல்லாததன் காரணமாக அதிக புள்ளிகளைப் பெறுகின்ற மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியைத் தடுக்க வேண்டும் என்பதே அமைச்சரின் எண்ணமாகும். ஆனாலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை 7-8 ஆம் வகுப்புகளிலேனும் சேர்த்துவிட விரும்புவதாகவும், அப்போட்டி நிலைமையின் காரணமாக பிள்ளைகளின் சாதனை மட்டங்களை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 53,000 பட்டதாரிகளுள் கல்வித் துறைக்கு பணியமர்த்தப்பட்ட சுமார் 31,000 பேர் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கருத்து தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலோர் அதிக சம்பளத்துடனான ஆசிரியர் தொழிலில் இணைந்துகொள்ள ஆர்வமாக இருந்த போதிலும், முறையான ஆசிரியர் பயிற்சி இன்றி, போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்படாமல், சட்டப்பூர்வ வயதைக் கடந்தவர்களாக ஆசிரியர் பணியில் இணைத்துக் கொண்டமை பொருத்தமற்றது என அமைச்சர் சுட்டிக்காட்டினார். கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படுவது உயர்தரம் சித்தியடைந்த 19, 20 வயதுடைய இளைஞர் யுவதிகளேயாகும் என்பதுடன் 45 வயதுடைய பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்து பயிற்சியளிப்பது குறைவான பலனையே தருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார். 80 இலட்சம் பெற்றோர்கள் மற்றும் 41 இலட்சம் மாணவர்களைக் கொண்ட முழு நாட்டையும் இந்த நிலைமை பாதிக்கும் என்பதாலும், இற்றைப்படுத்தப்பட்ட அறிவினூடாக முன்னோக்கிச் செல்லாமல் திறமையான மனித வளங்களைக் கொண்ட பண்புத்தர அபிவிருத்தியுமின்றி பெயர்ப்பலகைகளுக்கு மாத்திரம் தேசிய பாடசாலைகளாக்கப்பட்டு, தேசிய மட்டத்திற்கு தேசிய பாடசாலைகளை கொண்டு செல்ல முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தரமான கல்வியினூடாக பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினைத் தடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய அமைச்சர், பிள்ளைகளுக்காக 3,000 டன் உலர் உணவுகளை அமெரிக்காவிடமிருந்து மானியமாகப் பெற்றதையும் இதன்போது நினைவு கூர்ந்தார். அரசியல் பேச்சுக்களை மாத்திரம் பேசிக்கொண்டிருக்காமல் ஏதேனும் அர்ப்பணிப்புக்களைச் செய்து பிள்ளைகளின் ஊட்டச்சத்து மட்டத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்த அமைச்சர், கடந்த வருடங்களை விட இந்த வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு நான்கு மடங்கை விட அதிகமான செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடுமையான முயற்சியின் பயனாக அதற்கு அவசியமான பொருட்கள் தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார். கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் அவர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.