2022.08.15 திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக 2022.08.13 ஆம் திகதி கௌரவ கல்வி அமைச்சர், கல்விச் செயலாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கல்வி அமைச்சில் ஒன்றுகூடி மாகாணக் கல்விச் செயலாளர்களையும் இணைத்துக் கொண்டு பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர்.
1. அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற சகல பாடசாலைகளும் 2022.08.15 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் வாரத்தில் ஐந்து (05) நாட்களும் பொதுவான நேரத்தில் அதாவது மு.ப. 7.30 தொடக்கம் பி.ப. 1.30 வரையில் பாடசாலைகளை நடாத்துதல்.
2. போக்குவரத்து அசௌகரியங்கள் நிலவுகின்ற பிரதேசங்களில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பொருத்தமான போக்குவரத்து வேலைத்திட்டமொன்றினை தயாரிக்குமாறு சகல மாகாண அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
3. 2022.08.15 ஆம் திகதி ஆரம்பமாகின்ற பாடசாலை வாரத்தில் தொடர்ந்தும் போக்குவரத்து அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக அதிபர்களினால் பொருத்தமான வகையிலான சலுகைகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதுடன், அவ்வாறான சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் முறைமை தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர்களினால் அதிபர்களுக்கு தெளிவூட்டப்படும்.
4. எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதியில் பாடசாலை நேரத்தினை பாடவிதானங்களைக் கற்பிப்பதற்காகவே பயன்படுத்த வேண்டுமென்பதுடன், இணைப்பாடவிதான மற்றும் வெளிவாரிச் செயற்பாடுகளை பாடசாலை நேரத்தைத் தவிர்ந்த நேரங்களில் மேற்கொள்வதற்கும் பாடசாலைகளில் நடாத்தப்படும் விழாக்கள் போன்றவற்றினை வரையறுப்பதற்கும் மேலும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.