பாடசாலை மாணவர்களது மதிய உணவின் ஊட்டச்சத்து மட்டத்தினை மேம்படுத்தும் குறிக்கோளுடன் ஒரு தொகை உலர் உணவுப் பொருட்கள் அமெரிக்க அரசாங்கத்தினால் இந்நாட்டிற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவர்களால் வத்தளை, முதுராஜவெலயில் அமைந்துள்ள ‘ஸ்பெக்ட்ரா’ களஞ்சியத் தொகுதியில் இன்றைய தினம் (26) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களிடம் இந்த உணவுத் தொகை கையளிக்கப்பட்டது.
அதிக ஊட்டச்சத்து நிறைந்த 890 மெட்ரிக் டொன் ரின்மீன்கள் மற்றும் 2,000 மெட்ரிக் டொன் பருப்பு என்பன இவ்வாறு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் பொருட்டு இந்த உலர் உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
‘சேவ் த சில்ரன்’ (Save the Children) நிறுவனத்தின் நேரடித் தலையீட்டில் அந்நிறுவனம் கல்வி, நிதி மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று அமைச்சுக்களுடன் இணைந்து செயற்படுத்தும் இந்த போசாக்கு நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மாணவர்களின் பாடசாலை வருகையை ஊக்குவிப்பதும் கற்றலுக்கான அவதானத்தினை அதிகரிப்பதும் சமமான ஊட்டச்சத்து நிலையை பேணுவதும் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வாயிலாக எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, அதனூடாக மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்துவது இதன் பிரதான குறிக்கோளாக அமைந்துள்ளது. மேற்படி நிகழ்விற்கு ஐக்கிய அமெரிக்க கமத்தொழில் திணைக்களத்தின் வலயத்துக்கான பிரதிநிதி மரியானோ பெலாட் (Mariano Beillard) மற்றும் ‘சேவ் த சில்ரன்’ நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ஜூலியன் செல்லப்பா (Julian Chellappah) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.