2022.08.01ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக, 2022.07.30 (இன்று) ஆம் திகதி கல்வி அமைச்சில் கல்வி அமைச்சர், கல்விச் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இணையவழி தொழில்நுட்பத்தின் வாயிலாக மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், 2022.07.19 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிவித்தலுக்கமைவாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டப் பொறுப்பு பிரதி/ உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சகல அதிபர்களுக்கும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம், கடந்த வாரம் பாடசாலைகளை நடாத்திய விதத்திலேயே 2022 ஆகஸ்ட் 01 முதல் 05 வரையிலான வாரத்திலும் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் பாடசாலை நடாத்துவதற்கும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறு கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குமான செயற்பாடுகளை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும். இன்றேல் இணையவழிக் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளைச் மேற்கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
எவ்வாறாயினும், போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் இணக்கப்பாடு மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடத்த முடியும். இதன்போது பாடசாலைகளில் நிலவும் நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் பாடசாலைக்கு சமூகமளித்து கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் நெகிழ்வான கால அட்டவணையொன்றைத் தயாரித்துக் கொள்ள முடியும்.
மாகாண போக்குவரத்து அதிகாரசபையானது பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு பாடசாலை சேவைக்காக ஒதுக்கப்பட்ட தனியார் பஸ்களை பயன்படுத்துகின்ற அதேவேளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேற்படி பஸ்களில் சாதாரண பஸ் கட்டணத்தை செலுத்தி தமக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.