– ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக ஆகஸ்ட் 01 முதல்
பாசல் சேவா’ (பாடசாலைச் சேவை) எனும் பெயரில் புதிய தனியார் பேருந்து சேவை.
மாணவர்கள் சிரமமின்றி பாடசாலைக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை முறையாக ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விற்பனை முகாமையாளர் எஸ். எம். சி. பி. சமரகோன் மற்றும் அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல். மல்ஸ்ரீ த சில்வா ஆகியோரின் பங்கேற்புடன் இன்று (2022.07.26) கல்வி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது பாடசாலை வேன்கள் மற்றும் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளை அருகில் உள்ள பேருந்துச் சாலையில் (டிப்போவில்) இருந்து தடையின்றி உரிய முறைமைகளுக்கமைவாக வழங்கவும், அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் போக்குவரத்து சபை ஆகியன இணக்கம் தெரிவித்துள்ளன.
அதன்படி வாரத்தில் இரண்டு நாட்கள் (புதன் மற்றும் சனிக்கிழமை) பேருந்துச் சாலைகளூடாக முறையான முகாமைத்துவத்தின் கீழ் தேவையான அளவு எரிபொருள் விடுவிக்கப்படும்.
பாசல் சேவா’ (பாடசாலைச் சேவை) எனும் புதிய தனியார் பேருந்து சேவை ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பேருந்துகளின் பெயர்ப் பலகைகளில் தொடர்புடைய பாடசாலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு தினசரி இரண்டு வழிப்பயணங்கள் என்ற வகையில் பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும். தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அவர்கள் இதற்கான பேருந்துகளை பெற்றுக் கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதுடன் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய இரு தரப்பினரும் கட்டணம் செலுத்தி சிரமங்களின்றி இந்த போக்குவரத்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
தடையின்றி எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கென தயாரிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டம் தொடர்பில் பஸ் சங்கங்கள் தமது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் அனைவரினதும் ஒத்துழைப்பினையும் பெற்றுக் கொடுப்பதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.