மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற தேசிய பாடசாலைகளின் அதிபர்களுடன் நடாத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து 2022 ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது பற்றிய தகவல் 2022 ஜூன் 25 ஆம் திகதி கல்வி அமைச்சினால் ஊடக அறிவிப்பினூடாக வெளியிடப்பட்டது. அவ்வாறு இருந்தபோதிலும் அதற்கு பின்னர் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு 2022 ஜூன் 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் வாரத்தினுள் நாட்டில் எரிபொருள் விநியோகத்தினை இயல்பான வகையில் மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் இல்லையென அறிவித்துள்ள காரணத்தினால் 2022 ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை 01 ஆம் திகதி வரையிலான வாரத்தில் பாடசாலைகளை நடாத்திச் செல்வது தொடர்பில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே, கடந்த வாரத்தைப் போன்று 2022 ஜூன்27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் மேல் மாகாணத்தின் கொழும்பு வலயத்திலும் அதனை அண்மித்த நகரங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2022 ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தினுள் கடந்த வாரம் கிராமியப் பாடசாலைகளை நடாத்திச் சென்றதைப் போன்றே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போக்குவரத்து சிரமங்கள் இல்லாவிட்டால், செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாக்கிழமை ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்திச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும், போக்குவரத்து சிரமம் காரணமாக இந்த நாட்களில் பாடசாலைக்கு வருகை தராத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறை தினமாக பதிவு செய்ய வேண்டாம் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறிப்பிட்ட வாரத்தில் பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பில் ஏதேனும் சிக்கல் நிலைமைகள் காணப்படின் மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மூலமாக மாகாண கௌரவ ஆளுநர்களுக்கு அறிவித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்படுகிறது.
2022 ஜூன் 27 இல் ஆரம்பமாகும் வாரத்தினுள் க.பொ.த உயர்தரத்திற்கான தவணைப் பரீட்சைகளை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அத்தவணைப் பரீட்சைகளை இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் அறிவிக்கப்படுகிறது.