கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுடன் 2022.06.18 ஆம் திகதி நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2022.06.20 ஆம் திகதி முதல் 2022.06.24 ஆம் திகதி வரையான வாரத்தினுள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை கீழ் குறிப்பிடப்படும் வகையில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மூலமாக மாகாணங்களின் வலயக் கல்வி மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களிடமிருந்தும் அதிபர்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துக்கள் இத்தீர்மானங்களை மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
1. பிரதேசத்தின் மட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை போக்குவரத்து சிரமங்கள் பாதிக்காத நிலைமைகளின் கீழ் அப்பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்திச் செல்வதற்கு மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
2. மேலும், யாதேனுமொரு பாடசாலைக்குச் செல்ல முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அந்த நிலையிலும் பாடசாலையை பராமரிக்கக் கூடிய இயலுமை காணப்படின், வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்தாலோசித்து பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
3. பாடசாலை இயங்கிய போதிலும் யாதேனும் மாணவர் குழாத்திற்கு பாடசாலைக்கு வருகைதர முடியாமல் போனால், அந்த மாணவர்களுக்கு நிகழ்நிலை வழியினூடாக கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் காணப்படின் அந்த முறையைப் பயன்படுத்தும் இயலுமை உள்ளது.
4. மேல் மாகாணத்தின் கொழும்பு வலயத்திலும் அதனை அண்டிய நகரங்களிலும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களிலும் அமைந்துள்ள பாடசாலைகளை இந்த வாரம் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டதுடன், பிரதான நகரங்கள் அல்லாத பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களினதும் மாகாணக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.