கல்வியானது முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டிய அதேவேளை, முன்பள்ளியில் இருந்தே அந்த முழுமையான மாற்றத்தினை ஏற்படுத்தி மாணவர்களுள் ஒரு தரப்பினர் உயர்கல்வித் துறையிலும், திறமையான மற்றும் ஆற்றல்மிக்க மற்றொரு தரப்பினர் தொழிற்கல்வியிலும் நுழையும் வகையில் கல்வி முறைமையே மாற்றியமைக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவிக்கின்றார்.
மாணவர்களைத் இவ்விரண்டு பிரிவுகளுக்கும் தெரிவு செய்கின்ற போது தொழில்சார் திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்களை தரம் 09 இலிருந்தே தெரிவு செய்து தொழிற்கல்வித் துறையில் நுழைய வைப்பதன் மூலம் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் தெரிவித்தார். மே மாதம் 31 ஆம் திகதி திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அவர்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் உட்பட அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்கல்வி நிறுவனங்கள் பலவற்றின் பிரதானிகளின் பங்கேற்புடன் மேற்படி அமைச்சின் வளாகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.