– கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த,
எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்பட்டு, பாடசாலைகள் நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவ்வாறு அதிகரிக்கும் மேலதிக தினங்களில் இந்த காலப்பகுதியில் விடுபட்ட அனைத்து பாடத்திட்டங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். இன்று (2021.06.21) அனுஷ்டிக்கப்படுகின்ற சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான பயிற்சி அமர்வுகள் ஜூலை மாதம் தொடக்கம் இடம்பெறுவதோடு உயர்தர ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பின் மூலமாக பயிற்சி அமர்வுகளை பெற்றுக்கொடுப்பதனூடாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான மீட்டல், கேள்வி-பதில் மற்றும் வேறு மேலதிக பல வேலைத்திட்டங்கள் நடாத்தப்படவுள்ளது.
இந்த விசேட கல்வித் திட்டங்கள் ஆகஸ்ட், செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், சகல பயிற்சி அமர்வுகளும் ஜூலை மாதம் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட அன்றாடத் தரவுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை நாட்டின் முக்கிய நகரங்களைத் தவிர்ந்த கிராமியப் பிரதேசங்களில் 70% -80% ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாடசாலை வருகை பதிவாகுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
21வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அது ஒரு வரைவு நகலாக சட்ட வரைஞரிடமிருந்து மீள சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கியதன் பின்னர் எந்தவொரு தரப்பினராலும் 14 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும் எனவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.