வளர்ச்சியடைந்த நாடுகளில் கல்விச் செயற்றிறன் முன்னேற்றமானது அளவிடப்படுவது மாணவர்களிடமல்ல, ஆசிரியர்களிடமே.
– கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த
உயர் கல்வியறிவு மட்டத்தினைக் கொண்ட நாடுகளில் கல்வியின் செயற்றிறன் அளவிடப்படுவது மாணவர்களிடமல்ல, மாறாக ஆசிரியர்களிடமே அது அளவிடப்படுகிறது என்றும், ஆசிரியர்களின் வகிபாகம் எப்போதும் உயர்ந்த மட்டத்தில் காணப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தடைப்பட்டுள்ள மாணவர்களின் கல்வியை மீட்டெடுத்து ஒட்டுமொத்த கல்வித்துறையின் செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் பதவிநிலை அலுவலர்களுடன் நடாத்திய கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரின் தலைமையில் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் கீழுள்ள பல்வேறான திணைக்களங்கள், நிறுவனங்கள், சேவைப் பிரிவுகள், கிளைகள், அலகுகள் என்பனவற்றுக்கு இடையிலான பரந்த ஒருங்கிணைப்பை மீள ஏற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். சேவைகளை வினைத்திறனுடனும் செயற்றிறனுடனும் பேணிச் செல்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் உபாலி சேதர, பேராசிரியர் குணபால நாணாயக்கார, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன மற்றும் கல்வித்துறை சார்ந்த புத்திஜீவிகள் பலரும் கலந்துகொண்டனர்.