இலங்கை சோசலிச இயக்கத்தின் ஸ்தாபகர், தேசிய மாவீரர்
பிலிப் குணவர்தன அவர்களின் 50வது நினைவு தினம்…
சுதந்திர இலங்கையை உருவாக்கும் பொருட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசியப் போராட்டத்தை ஆதரித்து இலங்கை சோசலிச இயக்கத்தினை உருவாக்கிய ‘பொரலுகொட சிங்கம்’ என்று அழைக்கப்படும் தேசிய மாவீரர் பிலிப் குணவர்தன அவர்களின் 50வது நினைவு தினம் 2022.03.29 ஆம் திகதி கொழும்பு 07, இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
ஏகாதிபத்திய பொப்பி மலர் இயக்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட சூரியகாந்தி இயக்கத்தினூடாக சோசலிசப் பார்வையின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்த பிலிப் குணவர்தன அவர்கள், வயற் காணி சட்டத்தை அறிமுகம் செய்து, பத்தாண்டு விவசாயத் திட்டத்தின்படி கூட்டுறவு அபிவிருத்தி வங்கிகளை நிறுவி, விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கி விவசாயப் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதேவளை துறைமுகத்தினை தேசியமயமாக்கல், பஸ் தேசியமயமாக்கல் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நிலைநாட்டி மக்களின் நலனுக்காகப் பெரும் சேவை செய்தவர். மேலும் அப்போதைய இலங்கை அரசுப் பேரவையினதும் இலங்கைப் பாராளுமன்றத்தினதும் செயற்பாட்டு உறுப்பினராக கடமையாற்றிதோடு பல அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார்.
இந்த நினைவு தின வைபவம் அதி வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரரின் தலைமையில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உட்பட மகாசங்கத்தினரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் சிறப்புரையை பேராசிரியர் காமினி சமரநாயக்க அவர்களும், விசேட உரையை பொறியியலாளர் அன்டன் நாணயக்கார அவர்களும் நிகழ்த்தினர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் சமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணாயக்கார, நிமல் சிறிபால டி சில்வா, சிசிர ஜயக்கொடி, பியல் நிஷாந்த ஆகிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான யாதாமினி குணவர்தன, மற்றும் ஜயந்த சமரவீர அவர்களும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பல்வேறான புத்திஜீவிகள் மற்றும் குடும்ப உறவினர்களும் கலந்து கொண்ட பிலிப் குணவர்தன நினைவு தினம், பிலிப் குணவர்தன நினைவு தின சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. பிலிப் குணவர்தன அவர்களின் திருவுருவச் சிலைக்கு அவரது பேத்தி சங்கபாலி குணவர்தனவும் மலர் தூவி மலர்மாலை அணிவித்தார்.