பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழக வாய்ப்பினை இழந்த பெருமளவான மாணவர்கள் மீண்டும் க.பொ.த (உ.தர) பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுத் தருமாறு முன்வைத்த வேண்டுகோள் காரணமாக, க.பொ.த (உ.தர) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பம் கோரல் 2021.11.10 ஆம் திகதியிலிருந்து 2021.11.20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இணையவழி (Online) வாயிலாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்: www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி செயலியான (Mobile App) “DoE” இற்கு பிரவேசித்து உரிய அறிவுறுத்தல்களை கவனமாக வாசித்து அதன்படி சரியான இணையவழி (Online) முறைமையினூடாக விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
மேற்படி பரீட்சைக்கு அரசாங்க பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் உரிய பாடசாலையின் அதிபர்கள் ஊடாக அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) கடவுச்சொல் (Password) ஆகியவற்றினை பயன்படுத்தி இவ்விண்ணப்பங்களை மேற்கொள்ள வேண்டும். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையில் உரிய ஆலோசனைகளைப் பின்பற்றி இணையவழி வாயிலாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல் வேண்டும். அதன் அச்சுப் பிரதியை உரிய சந்தர்ப்பத்தில் காண்பிக்கும் வகையில் தம்வசம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.
மேலும், 2020 க.பொ.த (சா.தர) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளை 2021.12.01 ஆம் திகதி தொடக்கம் 2021.12.11 ஆம் திகதி வரையில் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.