கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள கல்வி நிர்வாக அதிகாரிகள், அதிபர்கள், பிரிவெனாதிபதிகள், பிரிவெனா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கென தேசிய கல்வி நிறுவகத்தினால் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டதாரி நிலைக்கு இட்டுச் செல்லும் வகையிலான கல்விமானி கௌரவ பட்டப்படிப்பு பாடநெறி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
நாடு முழுவதும் அமைந்துள்ள 45 நிலையங்களில் இந்த பாடநெறி நடைபெறுகின்ற அதேவேளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பாடநெறிகள் நடாத்தப்படும்.
120 திறமைச் சித்திகளைக் (Credits) கொண்டமைந்த இந்த கல்விமானி கௌரவ பட்டப்படிப்பானது பதிநான்கு பாடத் தலைப்புக்களைக் கொண்ட நான்கு வருட பாடநெறியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள அதேவேளை, தற்போது இப்பாடநெறியைப் பின்பற்றுகின்ற இந்த வருட நிறைவில் கல்விக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 4000 ஆகும்.
எதிர்வரும் வருடத்திற்கென மேற்படி பாடநெறிக்காக ஐயாயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்ற அதேவேளை தேசிய கல்விக் கட்டமைப்பில் மிகவும் பயன்மிக்க பணியினை ஆற்றும் வகையில் அவசியமான தொழில்சார் திறமைகளை பெற்றுக் கொள்வதற்கும் அதனூடாக கல்விக் கட்டமைப்பினை வலுவூட்டுவதற்காகவும் மேற்படி பாடநெறியினை கற்பதற்கு இணைந்து கொள்ளுமாறு தேசிய கல்வி நிறுவகம் கல்விசார் மாணவர்களை வேண்டி நிற்கின்றது.