கல்விக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டமாக 06 தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்படும் ‘விஷன் எப்.எம்’ அலைவரிசையும் அடுத்த வாரம் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
ஊடக அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வரலாற்றில் இதுவரை காலமும் காணப்படாத வகையிலான முழுநேர, நீண்டகாலம் நிலைத்திருக்கும் அலைவரிசைகளாக இந்த அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வானொலி அலைவரிசையை இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்துடன் இணைந்ததாகவும் தொலைக்காட்சி அலைவரிசைகளை இலங்கை ரெலிகொம் நிறுவனம் மற்றும் PEO TV ஊடாக ஒளிபரப்பு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேசிய கல்வி நிறுவகத்தின் தலையீட்டில் மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்கான சுமார் 7000இற்கும் அதிகமான ஒளிப்பதிவு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களது தலைமையிலான குழுக் கூட்டத்தினைத் தொடர்ந்து நிகழ்ச்சித்திட்ட ஒழுங்கமைப்பு மற்றும் உரிய ஒளிபரப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் வாரம் தொடக்கம் ஒளிபரப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்வி அலைவரிசைகளை ஆரம்பிப்பதற்காக அமைச்சானது கடந்த காலப்பகுதியினுள் பாரிய வேலைத்திட்டங்களை அமைதியாக மேற்கொண்ட அதேவேளை, அது தொடர்பிலான தெளிவுபடுத்தலை வழங்குவதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தினை பயன்படுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அமைச்சினூடாக இதுவரை காலம் மேற்கொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக விடயங்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் அன்றைய தினம் கிடைக்கின்றது. சகல ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா பணியாட்டொகுதிக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினைத் தொடர்ந்து செப்டெம்பர் மாதத்தில் இருந்து சுகாதார பரிந்துரைகளுக்கமைவாக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் தற்போது நிலவும் கொவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது நிச்சயமற்ற நிலையில் உள்ள அதேவேளை தற்போதுள்ள சூழ்நிலையில் மிகப் பொருத்தமான மாற்றுவழி செயற்பாடாக இணையவழி (Online) கல்விச் செயற்பாடு மாறியுள்ளது. கல்வி அலைவரிசைகளை ஒளிபரப்பு செய்வது தொடர்பான சகல தீர்மானங்களையும் மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் தற்போது ஒளிபரப்பு செய்யப்படுகின்ற குருகுலம், ஈ-தக்சலாவ நிகழ்ச்சிகளுக்கு மேலதிகமாக அவை இடம்பெறவுள்ளன.
இந்த விரிவான நிகழ்ச்சித்திட்டத்திற்கமைவாக அந்தந்த வகுப்புகளுக்கு உரியதாக வெவ்வேறான தொலைக்காட்சி அலைவரிசைகளாக ஆரம்பித்து கல்வியை திடப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொருளாதார நெருக்கடி, சுகாதர நெருக்கடி அத்துடன் ஆசிரிய சம்பள முரண்பாடு என எவ்வகையான பிரச்சினைகள் நிலவிய போதிலும் பிள்ளைகளின் கல்விக்கு முன்னுரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்விற்கு வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், சீதா அரம்பேபொல, பியல் நிஷாந்த, கல்வி மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட அரச அதிகாரிகள், கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமாதர அவர்கள், ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் உட்பட பலரும் இணைந்து கொண்டனர்.