- 03 மாதங்களில் தீர்வு, பாதீட்டின் மூலம் பெற்றுக்கொடுக்க தீர்மானம்.
- அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஆசிரியர், அதிபர் மற்றும் சமமான சேவைகளுக்கு நியாயம் வழங்கப்படும்.
- சா.த. பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைக்குமாறு ஆசிரியர்களிடம் வேண்டுகோள்.
நேற்று மாலை கூடிய அமைச்சரவை, ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் “உடனடியாக தீர்வொன்றினை நடைமுறைச் சாத்தியமான வகையில் பெற்றுக் கொடுக்க முடியாதெனவும் அமைச்சரவையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் தீர்மானமானது ஏனைய அரச சேவையின் சமமான சேவைகளிலும் தாக்கத்திளை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலும் சகலருக்கும் நீதி கிடைக்கும் வகையில் ஒட்டுமொத்த அரச சேவை தொடர்பில் கவனத்திற் கொண்டு தீர்வினை மேற்கொள்ளவதற்கு” தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
2021/08/10 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக கவனத்திற் கொண்டு இந்த விடயத்திற்கான தீர்வொன்றினை வழங்குவதற்கு பொருத்தமான முறைமையாக 03 மாதங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத்திட்டத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் அமைச்சரவையில் நிலவும் மிக ஆளமான மதிப்பினையும் பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் மற்றும் உளைச்சல் தொடர்பில் நிலவும் உணர்வின் காரணமாகவும் இந்த பிரச்சினைக்கு விரைவாகவும் நீதியாயம் கிடைக்கும் வகையிலும் தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் தலைவராக முன்னாள் கல்வி அமைச்சராக பணியாற்றிய டலஸ் அலஹப்பெரும அவர்கள் நியமிக்கப்பட்டார். அதன் ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர்களாகிய மஹிந்த அமரவீர, விமல் வீரவங்ஸ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்ட அதேவேளை, குழுவின் அழைப்பாளர் மற்றும் செயலாளராக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. நிதி அமைச்சருடனும் கல்வி அமைச்சருடனும் கலந்துரையாடி மிக விரைவாக குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அமைச்சரவையினால் மேற்படி குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாத ஒரு சூழ்நிலை இன்று நாட்டில் நிலவுகின்ற காரணத்தினாலும் இணையவழிக் கல்வி எமது பிள்ளைகளுக்கு மிகமிக அவசியம் என்ற காரணத்தினாலும் இணையவழிக் கற்பித்தலில் இருந்து விலக வேண்டாமென ஆசிரியர்களிடமும் அதிபர்களிடமும் வேண்டி நிற்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 622,000 மாணவர்கள் பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்ற அதேவேளை, மேற்படி பெறுபேறுகளை வெளியிட முடியாமல் இருப்பதற்கான காரணம் ஆசிரியர்கள் அழகியல் பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகளில் இருந்து விலகியிருப்பதே எனவும், எனவே பிள்ளைகளின் நிலைமை தொடர்பில் சிந்தித்து 24 வருடங்களாக நிலவி வந்த பிரச்சினை தொடர்பில் முன்னொருபோதும் மேற்கொள்ளாத அளவிற்கு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு பிள்ளைகளை நிர்க்கதி நிலைக்கு தள்ள வேண்டாம் எனவும் வேண்டிக்கொண்டார். தற்போது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீடசைகளை நடாத்துவதற்கு அவசியமான சகல ஏற்பாடுகளும் மேற்கொண்டிருக்கின்ற நிலைமையில் பிள்ளைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாமெனவும் அமைச்சர் இதன் போது வேண்டிக்கொண்டார்.