அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
பாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும் எனவும் அதன் முதன்மை நடவடிக்கையாகவே தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம்பெறுகின்றதெனவும் அண்ணளவாக 279,020 தடுப்பூசிகள் இதற்கென அவசியம் எனவும் அவ்வாறு பாடசாலைகளை திறக்கின்ற போது ஏற்படக் கூடிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்தரையாடப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான பின்னணியை படிப்படியாக உருவாக்குவது தொடர்பில் கல்வி அமைச்சில் விசேட வைத்திய நிபுணர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக சகல பாடசாலைகளையும் மூட வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் கல்விசார் விடயங்களில் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பினை குறைத்துக் கொள்ளும் வகையில் குருகுலம், ஈ தக்சலாவ போன்ற பல நிகழ்ச்சிகளை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள அதேவேளை இணையவழி தொலைக்கல்வி முறைமையலும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எவ்வாறெனினும் தொலைக்கல்வி நடவடிக்கையானது எந்த வகையிலும் வகுப்பறையில் ஆசிரியருடன் மேற்கொள்ளும் கற்றல் செயற்பாட்டினைப் போன்று மகிழ்ச்சிகரமான ஒரு மாற்றுவழியல்ல. அதற்கான தயார்நிலைக்கு மிக நீண்ட காலம் அவசியமாகின்றது. விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மாத்திரமே பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன் முதலாவது படிமுறையே தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையாகும் என்பதுடன் கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சகல தரப்பினருக்கும் தடுப்பூசி வழங்குவது மிகவும் அத்தியாவசியமான விடயமாகும். மேலும் கல்வி மற்றும் கல்வி சாரா பணியாளர்களுக்கு வழங்கும் பொருட்டு அண்ணளவாக 279,020 தடுப்பூசிகள் அவசியமாகின்றது. தடுப்பூசி வழங்குவதன் மூலமாக ஆசிரியர்களது சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் பெற்றோர் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் விடயமும் இடம்பெறும். பாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவாக பாடசாலைகளை ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் அபிலாஷை என்பதுடன் பாடசாலை மாணவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு மிக்க போக்குவரத்து தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா, விசேட வைத்திய நிபுணர்கள் குழு, பாடசாலை அலுவல்கள் பற்றிய மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசேன மற்றும் கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமாதர உட்பட பலர் கலந்து கொண்டனர்.