கொவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக தற்போது பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் இணையவழி தொலைக்கல்வி வழிமுறையினூடாக இடம்பெறுகின்ற போதிலும் பல்வேறான காரணங்களால் அந்த வசதிகளைப் பெறமுடியாத மாணவர்களுக்காக “பிரதேச கற்றல் நிலையங்களை” நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
2021/06/21 ஆம் திகதி நாராஹேன்பிட்ட அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இணைந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
கொவிட் – 19 தொற்று நோய் நிலைமையின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படாமையின் காரணமாக தற்போது கற்றல் நடவடிக்கைகள் தொலைக்கல்வி/ இணையவழி முறைமையிலேயே இடம்பெறுகின்றன. அதேவேளை குருகுலம், இ-தக்சலாவ மூலமாக பிள்ளைகளுக்கான கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இ-தக்சலாவ மூலமாக ஆசிரியர்களுக்கு ‘வர்ச்சுவல் வகுப்பறை’ உருவாக்கப்பட்டு கல்வியைப் பெறுவதற்கான கற்றல் முகாமைத்துவ கட்டமைப்பின் மூலமாக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இ-தக்சலாவ நிகழ்ச்சியில் 65000 பாட அலகுகள் உள்ளடக்கப்பட்டுள்ள அதேவேளை ஒரு நாளைக்கு சுமார் 2½ இலட்சம் பேர் இதற்குள் பிரவேசித்தும் வருகின்றனர். கடந்த மாதம் 3.5 மில்லியன் பேர் இதற்குள் பிரவேசித்திருந்தனர்.
குருகுலம் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ‘ஐ அலைவரிசை’ ஊடாக சிங்கள மொழியிலும் ‘நேத்ரா அலைவரிசை’ ஊடாக தமிழ் மொழியிலும் செயற்படுத்தப்படுகின்றது. ஒரு நாளைக்கு 16 மணித்தியாலங்கள் என்ற வகையில் 05 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக தரம் 03 தொடக்கம் உயர் தரம் வரையிலான சுமார் 5000 பாடங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இ-தக்சலாவ நிகழ்ச்சியை பயன்படுத்துவதற்கு எதுவிதமான கட்டணமும் அறவிடப்படுவதில்லை. மேற்படி இணையதள மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ‘கல்வி பண்புத்தர அபிவிருத்தி மற்றும் தேசிய கல்வி நிறுவனம்’ என்பவற்றின் முழுமையான தரப்படுத்தலுக்கமைவாக மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் மாகாண, கோட்டகல்வி, பாடசாலை மற்றும் வகுப்புக்கள் என்ற அடிப்படையில் சமூக ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக பெருமளவிலான நிகழ்ச்சிகள் உரிய விடயதான பணிப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்படுகின்றன. எனினும் இவ்வனைத்திற்கும் பிரவேசிக்க முடியாத சிக்கல் நிலைமை நாட்டின் 12% அல்லது அதற்கு சற்று அதிகமான தரப்பினரைப் பாதித்துள்ளது.
அதனடிப்படையில் கல்வி அமைச்சானது, பிரதேச கற்றல் நிலையங்களை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 17 ஆம் திகதி சகல மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக சிறு குழுக்களாக ஒன்றுகூடக் கூடிய இடங்களில் கிராமிய ரீதியாக ஆரம்பிப்பதற்கு கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சு மற்றும் டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியன இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. அந்த வகையில் அதற்கான இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. அந்த நிலையங்கள் காலை 7.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரையில் திறந்து வைக்கப்படவுள்ளன. அந்த நிலையங்கள் ஆகக் குறைந்தது 10 கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் டெப் கணினிகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அதன் செயற்பாடுகள் பற்றியதான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் வலய மட்டத்திலும் மேற்பார்வை மற்றும் வழிகாட்டல்கள் மாகாண மட்டத்திலும் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.