கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பிரிஸ்
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடாத்தப்படவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையை இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரையில் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/04/09 ஆம் திகதி பத்தரமுல்லை கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
அத்துடன் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கும் 2021 வருடத்திற்குரிய க.பொ.த சாதாரண தர பரீட்சையை 2022 ஜனவரி மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கொவிட் பரவல் காரணமாக பாடசாலை பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டது. பொதுவாக ஒரு வருடத்தில் 200 நாட்கள் பாடசாலை நடைபெறும். ஆயினும் இந்த வருடம் 150 நாட்கள் மாத்திரமே பாடசாலை நடைபெற்றது. மேல் மாகாணத்தில் அது 130 நாட்களாக குறைவடைந்தது. இணையவழி மூலமாக இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்வதில் தடையாக இருந்த காரணி இணையதள வசதிகள் நாட்டின் சகல பிரதேசங்களிலும் ஒரே விதமாக காணப்படாமையே ஆகும். எனவே மிகக் கவனமாக கலந்துரையாடியே தீர்மானங்கள் எட்டப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமாதர அவர்களும் கலந்து கொண்டார்.